தூத்துக்குடியில் கழிவு நீர் கால்வாய் பணிக்காக கோவில் சுவர் இடிக்கப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி தருவை மைதானம் எதிரே அருந்ததியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் உள்ளது. மேலும் கோவில் நிர்வாகம் அதை சார்ந்து இந்து அரிசன தொடக்கப் பள்ளியும் நடத்தி கல்வி சேவை புரிந்து வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங்களில் சாலை வடிகால் அமைக்கும் பணிக்காக இந்து கோவில்களை அகற்றியும், இடித்தும் வருகிறது.
இந்நிலையில் நேற்று ஜார்ஜ் ரோட்டில் உள்ள காளியம்மன் கோவிலில் வடிகால் அமைக்கும் பணிக்காக கோவிலின் முகப்பில் பெரிய அளவில் குழி தோன்றியுள்ளனர். அப்போது கோவில் நிர்வாகிகள் கோவிலின் கோபுரம் சேதமடையாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்திதாக தெரிய வருகிறது.
இருப்பினும் தோண்டிய குழியில் பணியை விரைவுபடுத்த தாமதித்ததாலும், பணியின்போது குடிநீர் குழாய் சேதமடைந்ததை சரி செய்யாமல் கிடப்பில் போட்டாலும் கோவில் முகப்பு சுவர் கோபுரத்தில் மண்ணரிப்பு ஏற்பட்டு ரூ. 5 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட கோவிலின் முகப்பு கோபுரம் அப்படியே இடிந்து விழுந்தது. இதில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. எனினும் கோயில் கோபுரம் இடிந்து விழுந்ததால் அப்பகுதியே பரபரப்பானது. இதனை அறிந்த கோயில் நிர்வாகிகளும் பொதுமக்களும் அப்பகுதியில் முற்றுகையிட்டனர்.
மேலும், தூத்துக்குடி மாநகர மாவட்ட இந்து முன்னணி தலைவர் இசக்கி முத்துக்குமார் தலைமையில், தொடர்ந்து மாநகராட்சி பணிகளை காரணம் காட்டி இந்து கோவில்களை இடித்து வரும் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்த இடிந்த கோவிலின் கோபுரத்தை மாநகராட்சி நிர்வாகமே அதன் சொந்த செலவில் கட்டித்தர வேண்டும், கோயில் இடிப்பு போன்ற மாற்றாந்தாய் மனப்பான்மை கைவிடக் கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி டவுண் டிஎஸ்பி கணேஷ், தென்பாகம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துகணேஷ், சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இடிக்கப்பட்ட கோவில் கோபுரத்தைக் மாநகராட்சி சார்பில் கட்டி தருவதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
மறியலில் இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் நாராயணன் ராஜ், கோவில் நிர்வாக குழு தர்மகர்த்தா ராஜ், தலைவர் வெற்றிவேல், அறிவிப்பாளர் சீனிவாசன், விழா கமிட்டி தலைவர் ஆறுமுகம்,பொருளாளர் சந்தி வீரன்,கமிட்டி உறுப்பினர் ஜெயபால்,விழா கமிட்டி உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஊர் பொதுமக்கள், இளைஞர் அணி, மகளிர் அணி, நிர்வாகிகளும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.