பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிகர் விமல் தயாரித்து நடித்த திரைப்படம் மன்னர் வகையறா. நடிகர் பிரபு, நடிகை சரண்யா, ஆனந்தி ஆகியோர் நடித்து வெளிவந்த இந்த நகைச்சுவை திரைப்படம் 2018ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி தமிழக திரையரங்குகளில் சினிமா சிட்டி என்ற விநியோக நிறுவனம் மூலம் வெளியானது. இந்நிலையில் படம் போதிய அளவு லாபமீட்டவில்லை என்பதால் சினிமா சிட்டி நிறுவனர் கங்காதரன் கூடுதல் டெபாசிட் தொகையை கேட்டு விமலின் விட்டுக்கும் அலுவலகத்திற்குமாக செருப்பு தேய நடையாய் நடந்து வருகிறார். ஆனால் விமல் பணம் தரவில்லை. இதனையடுத்து நடிகர் விமலுக்கு சினிமா சிட்டி விநியோகிஸ்தர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். தங்கள் தயாரிப்பில் உருவான மன்னர் வகையறா திரைப்படத்தின் விநியோக உரிமையை நான் வாங்கியிருந்தேன். 1.5.கோடி மினிமம் கேரண்டி தொகையும், 1.5 கோடி திருப்பித்தரக்கூடிய கூடுதல் தொகையையும், கொடுத்திருந்தேன். ஆனால் படம் மினிமம் கேரண்டி தொகை அளவிற்குக் கூட வசூலாகவில்லை என்பது தாங்கள் அறிந்ததே. இது தொடர்பான கணக்கு விபரங்களையும் ஒப்படைத்துவிட்டேன். ஒப்பந்தப்படி திருப்பித்தர வேண்டிய ரூ.1.5 கோடியை தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக தங்கள் அலுவலத்திற்கு அலைந்துகொண்டிருக்கிறேன். இதோ,அதோ என்று காலம் தாழ்த்துவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள். இந்த டெபாசிட் தொகை படத்தை வெளியிட்ட 9 விநியோகிஸ்தர்களுக்கும் பிரித்துத் தர வேண்டிய பணமாகும். இந்த தொகையை தாங்கள் செலுத்தாத காரணத்தால் நான் விநியோக உரிமை வாங்கி வைத்திருக்கும் மற்ற படங்களையும் வெளியிட முடியாமல் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறேன். எனவே இக்கடிதம் கண்டவுடன் பணத்தை தர வேண்டும் என்று கங்காதரன் கடிதம் எழுதியுள்ளார். திரைப்படம் வெளியாகி கடந்த 3 ஆண்டுகளாக நடிகர் விமல் இழுத்தடிக்கும் பணம் 1.5 கோடி கிடைக்குமா? விநியோகிஸ்தர்கள் மற்றும் நடிகர் விமலிடையே உள்ள பணப்பிரச்சனை நீங்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.