• Tue. Apr 16th, 2024

விமல் விவகாரம் -பின்வாங்கிய பரதன் பிலிம்ஸ்… பின்னணி என்ன?….சினிமா வட்டாரத்தில் கிசுகிசு…

Byadmin

Jul 20, 2021

கிராமத்து பாணியிலான வசன உச்சரிப்பு, எளிமையான தோற்றம் ஆகியவற்றால் ரசிகர்களை ஈர்த்து வெற்றி பட நாயகனாக வலம் வந்தவர் ” ஜூனியர் ராமராஜன் ” என்று அழைக்கப்பட்ட நடிகர் விமல்.

இவர் நடிப்பில் வெளிவந்த களவாணி, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை, தேசிங்கு ராஜா ஆகிய படங்கள் வசூலை வாரி குவித்தன. இதனால் புகழின் உச்சிக்கு சென்றவர் தகாத நண்பர்கள் சகவாசத்தால் குடிக்கு அடிமையாகி கதைகளை தேர்ந்தெடுப்பதில் கோட்டை விட்ட காரணத்தால் மார்க்கெட் சரிவை சந்திக்க நேர்ந்தது.

வீழ்ந்து போன மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சொந்த படம் எடுத்த வகையிலும், ஊரில் சொகுசு பங்களா கட்டுவதற்காகவும் ஃபைனான்சியர்களிடம் கடன் வாங்க நேர்ந்தது. அப்படி கடன் வாங்கி எடுத்த சொந்த படமும் பப்படம் ஆனதால் கடனை கட்ட வழி தெரியாமல் தவித்தவர் புதுப்படங்களில் ஒப்பந்தமாகி அந்த படத்தின் மூலம் கிடைக்கும் ஊதியத்திலிருந்து கடனை அடைப்பதாக கூறிய உத்தரவாதத்தை நம்பிய ஃபைனான்சியர்களுக்கு , சொன்னபடி படத்தின் மூலம் கிடைத்த ஊதியத்தை தராமல் சொந்த ஊரில் விவசாய நிலங்களை வாங்கி போட ஆரம்பித்தார்.

குறித்த காலத்திற்குள் பணம் திரும்ப கிடைக்காததால் கடன் கொடுத்த ஃபைனான்சியர்கள் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடுத்து விட்டனர். விநியோகஸ்தர்கள் சங்கங்களிலும் பணத்தை வசூல் செய்து தருமாறு புகாரும் கொடுத்துள்ளனர்.

இதனால் விமல் நடித்த படங்களை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் யாரும் முன்வரவில்லை. இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் உருவான
” எங்க பாட்டன் சொத்து “, மாதேஷ் இயக்கத்தில் உருவான ” சண்டக்காரி ” போன்ற படங்கள் தயாராக இருந்தாலும் வியாபாரம் பேசுவதற்கு எவரும் முன்வரவில்லை.

இதன் எதிரொலியாக விமல் நடித்து வரும் மற்ற படங்களுக்கு ஃபைனான்ஸ் செய்தவர்கள் நிதிஉதவி அளிப்பதை பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள்.

இசையமைப்பாளர் ஜான் பீட்டர் தயாரிப்பில் உருவாகி வரும் ” படவா ” படத்திற்கு ஈரோடு அம்மன் டெக்ஸ் உரிமையாளர் 1 கோடியும், திருச்சி பரதன் பிலிம்ஸ் 1 கோடியும், பன்னீர் செல்வம் என்பவர் 25 லட்சமும் நிதியுதவி செய்துள்ளனர். படத்தை முடிக்க மேற்கொண்டு இரண்டு கோடி தேவைப்படுவதாலும், பட வெளியீட்டின் போது விமலின் கடன் பிரச்சனைகள் தலைதூக்கும் என்பதாலும் பரதன் பிலிம்ஸ் பைனான்ஸ் ஒப்பந்தத்திலிருந்து பின் வாங்கிவிட்டது.

மேலும் மஜித் தயாரிப்பில் உருவாகி வரும் ” மசாலா கஃபே , பெஞ்சமின் இயக்கத்தில் உருவாகி வரும் ” லக்கி ” போன்ற படங்களும் ஃ பைனான்ஸ் கிடைக்காமல் முடங்கியுள்ளன.

இன்றைய நிலவரப்படி பன்னிரண்டு கோடி ரூபாய் கடனை அடைத்தால் மட்டுமே விமல் படம் வெளியாகும் என்கிற சூழல் நிலவுவதால் விமலை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்களும் தயங்குவதாக தெரிகிறது.

ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் குடியும், கூத்துமாக ஊரார் பணத்தில் உல்லாசம் அனுபவித்து வருகிறார் நடிகர் விமல் என்று கடன் கொடுத்தவர்களும் சினிமா வட்டாரத்திலும் கிசுகிசுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *