• Wed. Apr 24th, 2024

பக்ரீத் பண்டிகையையொட்டி திருச்சி மாவட்டத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை…

Byadmin

Jul 21, 2021

தன்னைப் படைத்த இறைவனின் கட்டளையை செயல்படுத்துவதே வாழ்க்கை என்ற உன்னத குறிக்கோளுடன் வாழ்ந்த இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் ஈடுஇணையற்ற தியாகத்தை நினைவூட்டும் நாள் பக்ரீத் திருநாள். பிறருக்காக தம்மை அர்ப்பணித்தல், ஏழை, எளியோருக்கு தர்மம் செய்தல், நம்மை படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்துதல் ஆகிய நற்பண்புகளை உணர்த்தும் நாள் பக்ரீத் திருநாள்.

பக்ரீத் பண்டிகையையொட்டி திருச்சி அரியமங்கலம் பள்ளிவாசல் திடலில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பிலும் மற்றும் நத்தர்ஹலி தர்ஹா மற்றும் அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இந்த தியாகத் திருநாளில் அன்பு, பாசம், பரிவு சகோதரத்துவம் ஓங்கவும், அமைதி, சமாதானம், மனிதநேயம் தழைக்கவும், இல்லாமை இல்லை என்ற நிலை உருவாகவும், தன்னலமற்ற சமுதாயம் உருவாகவும் பிரார்த்தனை மேற்கொண்டனர். மேலும் ஒருவருக்கொருவர் தன்னலமின்றி கட்டியணைத்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர். தொடர்ந்து ஏழை, எளியவர்களுக்கு குர்பானி மூலம் ஆடு, மாடுகளை பலியிட்டுஇறைச்சிகளை வழங்கி மகிழ்ந்தனர்.

இந்நாளில் கொரானா நோய் தொற்றிலிருந்து அனைவரும் குணமடையவும், வரும் காலங்களில் மக்கள் யாவரும் மகிழ்வுடன் இழந்த வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அல்லாஹ் ஆசி வழங்க வேண்டும் என்றும், கடந்த காலங்களைப் போலவே இல்லாமல் நோய்த் தொற்றில் இருந்து விடுபட்ட நிலையில் அனைவரும் ஒன்றுகூடி பிரார்த்தனையில் ஈடுபட வழிவகை செய்த ஏக இறைவனுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இதேபோன்று துறையூர், மணப்பாறை, லால்குடி, முசிறி உள்ளிட்ட பகுதிகளிலும் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டுவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *