• Mon. Apr 21st, 2025

தொடக்கப்பள்ளிக்குள் ஒரு தொல்லியல் ஆசிரியர்…

Byadmin

Jul 21, 2021

சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியத்தில் உள்ளது ஐம்பூத்துமலை எனும் கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் வை.கலைச்செல்வன். இவரும் இதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ரவி என்பவரும் ஆசிரியர் பெருந்தகைகள் ஒரு கலை பொக்கிஷங்களாக உள்ளனர். பள்ளி குழந்தைகள் என்ன சீருடை அணிகிறார்களோ அதே உடையில் இந்த ஆசிரியர்களும் உடை அணிந்து வருகிறார்கள். இந்த பள்ளியின் மேம்பாட்டுக்காக தங்கள் சொந்த செலவில் நண்பர்கள் உதவியுடன் பள்ளி குழந்தைகளுக்கு டி.வி, டி.ஸ் ஆண்டனா, சோலார் விளக்குகள் பொருத்தி உள்ளனர். பள்ளி சுவர்களில் ஓவியங்கள் வரைந்துள்ளார். கலைச்செல்வன் இயற்கை ஆர்வலரா இருப்பதால் கேமராவை எடுத்துக்கொண்டு அப்பகுதியில் உள்ள 200 வகையான பறவைகளை படம் எடுத்து அதை மாணவர்களின் பார்வைக்கு வைத்துள்ளார்.இவர் பள்ளியில் பணிக்கு சேர்ந்த நாட்களில் 7 மாணர்களே இருந்தனர். இப்போது 18 மாணவர்கள்; பயில்கிறார்கள். மாணவர்களின் வீட்டுக்குச்சென்றும் பாடங்களை நடத்துகிறார். இக்கிராமத்தில் உள்ளவர்கள் ;தங்கள் குழந்தைகளுக்கு இவரது பெயரை சூட்டியுள்ளார்கள். சாட்டை திரைப்படத்தில் வரும் சமுத்திரக்கனி போல இவரும் ஒரு வித்தியாசமான ஆசிரியர். விடுமுறை நாட்களில் சேலம் மாவட்;டத்தில் உள்ள கல்வெட்டுக்களை ஆய்வு செய்து அதனை படியெடுத்து வைத்துள்ளார். இதுவரை 50க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களை தொல்லியல் ஆதாரங்களை சேகரித்து உள்ளார். பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல், கல்லூரி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரபு நடைப்பயணம் அழைத்துச்சென்று தொல்லியல் குறித்த தகவல்களை சேகரித்து கற்றுத்தருகிறார். அது குறித்து புகைப்படங்களை காட்சிபடுத்தியுள்ளார். தொல்லியல் துறை வெளியிடும் ஆவணம் எனும் புத்தகத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக கட்டுரைகள் எழுதி வருகிறார். ஏதோ சம்பளம் வாங்கினோம், வறட்டுத்தனமாக பாடம் நடத்தினோம் என்றில்லாமல் மாணவர்களின் அறிவுத் தேடலின் புதையலாக விளங்கும் கலைச்செல்வன் ஆசிரியர்கள் தான் ஆசிரியர் பெருந்தகை என்ற பெருமைக்குரி;ய வார்த்தைக்கு சொந்தமானவர் என்றால் அது மிகையாகாது. மதுரை அருகேயுள்ள கீழடியில் தமிழர்களின் நகர நாகரீகத்தை வெளிக்கொண்டு வந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் போன்றவர்களை ஒன்றிய அரசு அசாம் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்தது. அதன் பிறகு கீழடி அகழாய்வு கிடப்பில் போடப்பட்டு பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் மீண்டும் தொடங்கப்பட்டு பல அரிய பொருட்கள் கிடைக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழகம் முழுவதுமே தமிழனின் தொன்மங்கள் படிந்து கிடக்கின்றன. அதனை தோண்டி வெளிக்கொணர கலைச்செல்வன் போன்ற ஆசிரியர்களால் தான் உலகின் மூத்தகுடி தமிழ்க்குடியென்று பறைசாற்ற முடியும்.