• Wed. Apr 24th, 2024

தேனி மாவட்டத்தில் கூட்டுறவு செயலாளர் கைது….

Byadmin

Jul 20, 2021
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே ரெங்கசமுத்திரம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகளுக்கு அரசு அறிவித்துள்ள அனைத்து விதமான கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சங்கத்தில் கடன்பெற்ற விவசாயிகள் திருப்பி செலுத்திய தவணைத்தொகையை முறையாக கூட்டுறவு சங்க கணக்கில் வரவு வைக்காமல் கையாடல் செய்து இருப்பதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் அங்கு தணிக்கை செய்தனர். அப்போது, 2011-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையில்  விவசாயிகள் செலுத்திய தவணைத்தொகையை கூட்டுறவு சங்க கணக்கில் வரவு வைக்காமல் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, ரூ.16 லட்சத்து 58 ஆயிரத்தை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கணக்கில் செலுத்தாமல் மோசடி நடந்துள்ளது .
இந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சக்கம்பட்டியை சேர்ந்த முருகேசன்(வயது 54) என்பவர் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர், அந்த பணத்தை மோசடி செய்து இருப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தேனி மாவட்ட வணிகவியல் புலனாய்வு பிரிவில், கூட்டுறவு துணைப் பதிவாளர் முத்துக்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து , கூட்டுறவு செயலாளர் முருகேசனை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேற்படி முருகேசன் பல ஆண்டுகளாக ஒரே சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வந்த காரணத்தினாலேயே இந்த மாபெரும் ஊழல் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *