• Thu. Mar 28th, 2024

திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது – கமல்ஹாசன்!..

By

Aug 12, 2021

சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடும் விமர்சனம் செய்துள்ளார்.


ஆண்டுதோறும் குடியரசு தினம் (ஜன.,26), உழைப்பாளர் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆக.,15), மகாத்மா காந்தி பிறந்தநாள் (அக்.,2) ஆகிய முக்கிய நாட்களில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொதுமக்கள், தங்கள் பகுதி பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைப்பார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை.


இந்த சூழலில் இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், கொரோனாவை காரணம்காட்டி ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டாம் என்றும், இதுதொடர்பாக, கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.


தமிழக அரசின் இந்த முடிவுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக சாயம் வெளுத்து விட்டதாகவும் கடுமையாக அவர் விமர்சித்தார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், ” கொரோனாவில் தேர்தல் நடக்கும், வாக்கு எண்ணிக்கை நடக்கும், பதவி ஏற்பு விழா நடக்கும், சட்டமன்றம் நடக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கான முஸ்தீபுகள் நடக்கும். ஆனால், கிராம சபை மட்டும் நடக்காது. அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.


முந்தைய ஆட்சியில் கிராம சபை நடத்த தொடுத்த வழக்கை திமுக ரகசியமாக வாபஸ் பெற்றுக் கொண்டபோதே இந்த அரசும் கிராம சபைகளைக் கண்டு அஞ்சுகிறது என்பதைப் புரிந்துகொண்டோம். திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *