• Tue. Dec 10th, 2024

தஞ்சாவூர் மாகராட்சி நகரமைப்பு அலுவலரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக நிர்வாகிகள் 2 பேரை போலீஸார் கைது!…

Byadmin

Aug 6, 2021

உரிய அனுமதியின்றி பாஜக சார்பில் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஃப்ளக்ஸ் போர்டை அகற்றிய தஞ்சாவூர் மாகராட்சி நகரமைப்பு அலுவலரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக நிர்வாகிகள் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் பண்ணைவயல் ஆர்.இளங்கோ உள்ளிட்ட 9 பேரை தேடி வருகின்றனர்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிடக்கோரி வலியுறுத்தி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியினர் நேற்று தஞ்சாவூர் பனகல் கட்டடம் அருகே காலை முதல் மாலை வரை உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சிக்கு போலீஸார் அனுமதி மறுத்த நிலையில் தடையுத்தரவை மீறி அக்கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரத நிகழ்ச்சி தொடர்பாக அக்கட்சியினர் தஞ்சாவூர் எலிஸா நகர் அருகே சாலையில் உரிய அனுமதியின்றி ஃப்ளக்ஸ் போர்டு வைத்திருந்தனர்.

இதுபற்றி தகவலறிந்த மாநகராட்சி ஊழியர்கள் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ராஜசேகர் தலைமையில் அங்கு வந்து அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த ஃப்ளக்ஸ் போர்டை அகற்றினர். அப்போது உண்ணாவிரத நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியூரிலிருந்து ஒரு வேனில் அவ்வழியே வந்து கொண்டிருந்த பாஜவினர் மாநகராட்சி ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தஞ்சை மாவட்ட பாஜக தலைவர் பண்ணை வயல் ஆர்.இளங்கோ உள்ளிட்ட பாஜகவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நகரமைப்பு அலுவலர் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக நகரமைப்பு அலுவலர் ராஜசேகர் அளித்த புகாரின் பேரில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸார் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்து லால்குடியைச் சேர்ந்த தெற்கு மண்டலத் தலைவர் அசோக்குமார் (44), அறந்தாங்கி நகர செயலாளர் இளங்கோவன் (33) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் பண்ணைவயல் ஆர்.இளங்கோ உள்ளிட்ட 9 பேரை தேடி வருகின்றனர்.