ஆட்சியர் என்றால் அந்த காலத்தில் துரை என்பார்கள். பக்கத்தில் சென்றால் சுட்டுவிடுவார்கள் என்ற பயம் இருக்கும். வெள்ளைக்காரர்கள் ஆட்சி அப்படித்தான். ஜமீன்தார் ஆட்சி காலத்திலும் வருவாய் அதிகாரிகளைக் கண்டால் மிரண்டு போகும் கிராமத்தார் உண்டு. வெள்ளைக்காரன் ஆட்சி தேவலை என்பவர்கள் அந்த காலத்தில் வாழ்ந்திருந்தால் தான் ஆட்சியின் கொடுரம் புரியும். இன்னும் 15 தினங்களில் நாட்டின் சுதந்திர தினம் வரப் போகிறது. சுதந்திரம் என்றால் என்பதை ருசித்து பார்க்க வேண்டும். இன்றைய இளைய தலைமுறை ஒரு மாவட்ட ஆட்சியருடன் சகஜமாக விளையாடுகிறார்கள் அல்லது மாவட்ட ஆட்சியர் இளைஞர்களுடன் சகஜமாக விளையாடுகிறார். இது தான் ஜனநாயகத்தின் சாதனை. இன்றைக்கு இருமாப்போடு இருக்கிற ஆட்சியர்களுக்கு மத்தியில் இந்த ஆட்சியர் கொஞ்சம் வித்தியாசமானவர். மக்களை நோக்கிய செயல்படும் ஆட்சியர்களை மக்கள் குறைகளை கேட்கிற ஆட்சியர்களை சமீப காலமாக பார்க்க முடிகிறது. காவல்த்துறை அதிகாரிகளில் சைலேந்திரபாபுவும் முந்தைய ஆட்சியர்களில் ஜீவரத்தினத்தையும் மக்கள் நாயகர்களாக சொல்லலாம். அந்த பட்டியலில் செஞ்சி செம்மேடு பகுதியில் இளைஞர்களுடன் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடும் ஆட்சியர் மோகனையும் சேர்க்கலாம். இது போன்ற நடவடிக்கை மூலமாக மக்கள் தங்கள் குறைகளை தயக்கமின்றி ஆட்சியரிடம் எடுத்துக்கூற முன்வருவார்கள். சிறந்த நிர்வாகம் நடைபெறும்.