• Fri. Apr 26th, 2024

சர்வாதிகாரத்துக்கு எதிரான துணிவுமிக்க புரட்சிப் போராட்டத்தை கற்றுத்தந்த இறைத்தூதர் வழி நடப்போம்!…

Byadmin

Jul 20, 2021

எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவரின் பக்ரீத் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;

தியாகத் திருநாளாம் ‘ஈதுல் அழ்ஹா’ எனும் ‘பக்ரீத்’ பெருநாளை உவகையுடனும், குதூகலத்துடனும் கொண்டாடும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள், கிருத்துவர்கள், யூதர்கள் என உலகின் பெரும்பான்மை மக்களால் மிகவும் மதிக்கப்படும் இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்கள், இறைவனின் கட்டளைக்காக எந்தவிதமான தியாகத்திற்கும், அர்பணிப்புக்கும் தன்னை தயார்படுத்திக் கொண்டார்.

மக்களின் அறியாமையை அகற்றி விழிப்புணர்வூட்டுவதிலும், ஏதேச்சதிகார சக்திகளுக்கு எதிராக போராடுவதிலும் இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்களின் அறிவாற்றலும், துணிச்சலும், தியாகமும், அர்ப்பணிப்பும் நமக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளன.

அராஜக, சர்வாதிகார கொடுங்கோலர்களிடமிருந்து மக்களை பாதுகாத்து உண்மை தழைத்திட பாடுபட வேண்டும் என்பதும், இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்கள் அன்றைய சர்வாதிகாரி நம்ரூதுக்கு எதிரான துணிவுமிக்க புரட்சிப் போராட்டங்கள் மூலம் நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள். இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்வு நமக்கு பல பாடங்களை கற்றுத்தருகின்றது.

ஆகவே, தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொதுவாழ்க்கையிலும் இடர்படுகிற சோதனைகளை எல்லாம் தாங்கி, பாசிச சர்வாதிகாரத்திடமிருந்து மக்களை பாதுகாக்கவும், மக்களிடையே அன்பும், சமாதானமும் தழைத்திடவும், ஜனநாயகம் ஓங்கிடவும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு உயர்ந்திடவும், சமூக நல்லிணக்கத்தையும், மத ஒற்றுமையையும் காத்திடவும், அநீதியை தகர்த்து நீதியை வென்றிடவும் தியாகங்கள் பல செய்திட உறுதியேற்போம். இன்றுபோல் என்றும் மகிழ்வுடன் வாழவும், குறைகள் நீங்கி நிறைவாழ்வு பெற்றிடவும், கொரோனா பெருந்தொற்றால் பரிதவித்து நிற்கும் மக்களின் துயர் நீங்கிடவும், எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் எமது தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *