கோயிலில் உண்டியல் பணத்தை பதுக்கிய பூசாரி, வீடியோ காட்சி வெளியானதால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி…
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் பிரசித்தி பெற்ற நீலகண்ட பிள்ளையார் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் முகூர்த்த நாட்களில் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கில் திருமணம், காதணி விழா நடைபெறுவது உண்டு.
இக்கோயிலில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வழிபாடு செய்து காணிக்கையாக தங்கம், வெள்ளி, ரொக்கப் பணம் ஆகியவற்றை உண்டியலில் செலுத்துவருகின்றனர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில், உண்டியல் நிறைந்ததும், அறநிலையத் துறை அலுவலர்கள், முடப்புளிக்காடு கிராமத்தினர், கோயில் பூசாரிகளான சங்கரன் வகையறாக்கள், அலுவலகப் பணியாளர் முன்னிலையில் உண்டியல் பணம் எண்ணுவது வழக்கம்.
அவ்வாறு கடந்த 28 ஆம் தேதி புதன்கிழமை அங்குள்ள மண்டபத்தில் உண்டியல் பணம் எண்ணப்பட்டது. அப்போது கோயில் பூசாரிகளில் ஒருவர் பணத்தை எடுத்து தனது சட்டைப் பைக்குள் பதுக்கி வைக்கும் காட்சி வீடியோவாக பரவலாக வெளியாகி வந்தது.
இந்நிலையில், சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கழித்த நிலையில் கோயில் நிர்வாக அலுவலர் சிதம்பரம் பேராவூரணி காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். பூசாரிகள் தரப்பில் அறங்காவலர் தலைவர் கணேசன் சங்கரன் என்பவர் கூறுகையில் இச்சம்பவம் பற்றி தங்களுக்கு தாமதமாக தெரிய வந்ததாகவும், அதில் ஈடுபட்டது யார் என்று விசாரித்து வருகிறோம். கோயில் நிர்வாகம் தரப்பில் புகார் அளிப்பதாகச் சொல்லி உள்ளனர் என பட்டும்படாமலும் பதிலளித்தார்.
கோயில் உண்டியல் பணம் என்னும் போது உண்டியல் பணத்தை கோயில் பூசாரி ஒருவர் தனது சட்டைப்பையில் எடுத்து வைக்கும் காட்சி வெளியாகி இருப்பது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.