கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகளை மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். கீழடியில் ஏழு குழிகளும், கொந்தகையில் ஐந்து குழிகளும், அகரத்தில் எட்டு குழிகளும் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கீழடியில் இதுவரை செப்பு காய்கள், பானை ஒடுகள், சுடுமண் உறைகிணறுகள், பாசிகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன. கொந்தகையில் 15 முதுமக்கள் தாழிகளும், பத்து சமதள எலும்பு கூடுகளும் கண்டறியப்பட்டன. முதுமக்கள் தாழிகளினுள் கருப்பு, சிவப்பு வண்ண சுடுமண் பாத்திரங்கள், கத்தி போன்ற இரும்பு ஆயுதம் உள்ளிட்டவைகளும் கண்டறியப்பட்டன. அகரத்தில் நத்தை கூடுகள், உறைகிணறு, சிறிய பானைகள், பானை ஓடுகள், தலையலங்காரத்துடன் கூடிய சுடுமண் பொம்மை, உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டன. மணலூரில் குறிப்பிடத்தக்க பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை. மத்திய தொல்லியல் துறை மூன்று கட்ட அகழாய்வையும் மாநில தொல்லியல் துறை மூன்று கட்ட அகழாய்வை முடித்து விட்டு நான்காம் கட்ட அகழாய்வையும் நடத்தி வருகின்றன. இந்நிலையில் மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் அகழாய்வு பணிகளை நேரில் பார்வையிட்டதுடன் இதுவரை கண்டறியப்பட்ட பொருட்களையும் நேரில் ஆய்வு செய்தனர். மத்திய தொல்லியல் துறை மண்டல இயக்குனர் டாக்டர் மகேஸ்வரி, மத்திய தொல்லியல் துறை துணை இயக்குனர் டாக்டர் அருள்ராஜ், புதுவை பல்கலை கழக தொல்லியல் துறை தலைவர் டாக்டர் ராஜன், மத்திய தொல்லியல் துறை கல்வெட்டியல் நிபுணர் டாக்டர் பத்மாவதி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். மத்திய குழுவுடன் மதுரை அழகப்பா பல்கலை கழக மரபணு பிரிவு தலைவர் டாக்டர் குமரேசன், தமிழக தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம், தொல்லியல் நிபுணர் சேரன், தொல்லியல் அலுவலர்கள் சுரேஷ், ரமேஷ், காவ்யா உள்ளிட்டோர் ஆய்வு பணியில் கிடைத்த பொருட்கள் குறித்தும், ஆய்வு பணிகள் குறித்தும் விளக்கமளித்தனர்.