

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் அங்கிருந்து வெளியேற காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிந்து வருகின்றனர். விமானங்கள் அனைத்திலும் முந்தியடித்து கொண்டு ஏறுவதால் நிலைமை கையை மீறியுள்ளது.

இதையடுத்து, காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க படையினர், கூட்டத்தை கட்டுப்படுத்த வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இருப்பினும் நடந்த தள்ளு முள்ளுவை தடுக்க கூட்டத்தை நோக்கி சுட்டதில் இருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காபூல் விமான நிலையம் மூடப்பட்டதால் ஆப்கானிஸ்தான் நாட்டில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 12.30க்கு டெல்லியில் இருந்து செல்லவிருந்த விமானத்தை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

