காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடங்கிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறியதாக காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் 9 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டார். பெற்றோரின் படத்தைப் பகிர்ந்ததன் மூலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளியிட்டுவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு, தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று, தங்களது கட்சியின் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால், செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.
இந்நிலையில், தற்போது தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி, தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ட்விட்டர் , தனது கணக்கை முடக்கியுள்ளதாக குற்றம் சாட்டி காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் கணக்கின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்துள்ளது.