நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு டெல்லி செல்லாத அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் குடும்பத்தோடு டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.. அவரது மூத்த மகனும் தேனி எம்.பி.யுமான ரவீந்திர நாத், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வது உள்ளிட்ட பணிகளுக்காக டெல்லி சென்றபோது, தனியார் நட்சத்திர ஹோட்டலில்தான் தங்கி வந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் எம்.பி.க்களுக்கான தனி வீடு மாதிரியான பங்களா டைப் வீடு அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நிர்மன் பவன் அருகில் உள்ள மீனா பவனில் ரவீந்திரநாத்திற்கு ஒதுக்கப்பட்ட பங்களா வீட்டில் நாளை ஓ.பி.எஸ். முன்னிலையில் அவரது குடும்பத்தினர் பால் காய்ச்சி குடியேறுகின்றனர். இந்த நிகழ்வையொட்டி, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து, தனது மகனுக்கு மத்திய அரசில் அமைச்சரவை பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த திட்டமிட்டாராம் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், இதுவரை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருடனான சந்திப்புக்கு ஓ.பி.எஸ். தரப்பு அனுமதி கேட்டுள்ளதாகவோ, பிரதமர் அலுவலகமோ, உள்துறை அமைச்சர் அலுவலகமோ, ஓ.பி.எஸ்.ஸின் மரியாதை நிமித்தமான சந்திப்புக்குஅனுமதி வழங்குவது தொடர்பாகவோ எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை டெல்லியில் பிரதமரையோ, உள்துறை அமைச்சரையோ ஓ.பி.எஸ். சந்திக்காமல் தமிழகம் திரும்பினால், பாஜக மேலிடம் அவரை முழுமையாக கை கழுவிவிட்டது என்று பிரசாரம் செய்ய எதிர்தரப்பான எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சுபமுகூர்த்த நேரம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.