

திருப்புவனம் அருகே காலனி பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல முயன்ற
ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்! போலீஸ் குவிப்பு!! பதற்றம்!!!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பிரமனூர் ஊராட்சி மன்ற தலைவர் பழனி செல்வம், பிரமனூரில் இருந்து காலனி பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல குழாய் பதிப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போலீஸார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய காலனி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரனூர் ஊராட்சியில் பிரமனூர், வயல்சேரி, வாடி, சொக்கநாதிருப்பு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இதில் பிரமனூர் ஆதிதிராவிடர் காலனியில் நீண்ட காலமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்ததால் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் இருந்து 31 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. பிரமனூரில் ஏற்கனவே கண்மாயை ஒட்டி ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. இதிலிருந்து ஆதிதிராவிடர் காலனிக்கு குழாய் பதிக்கும் பணியினை பிரமனூர் ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்செல்வம் பார்வையிட வந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி, சந்திரகுமார், அழகுராமச்சந்திரன், அழகுராஜா, உள்ளிட்ட ஆறு பேர் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இதில் வாக்குவாதம் ஏற்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பழனிசெல்வம், அவரது கணவர் முருகன் மற்றும் செல்போனில் படம் பிடிக்க முயன்ற திருமுருகன் என்பவரையும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏறப்பட்டது. தகவல் அறிந்து மானாமதுரை டிஎஸ்பி சுந்தரமாணிக்கம் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டதால் மோதல் தவிற்க்கப்பட்டது. குற்றவாளிகள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை உடனடியாக கைது செய்தால் தான் அமைதி ஏற்படும் என அப்பகுதி மக்கள் போலீஸாரை வலியுறுத்தி வருகின்றனர். அருகில் உள்ள பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மோதல் ஏற்பட்ட சம்பவம் சமுக ஆர்வலர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
