இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன், கலையரசன், ஜான் கொக்கன், ஜான் விஜய், உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான இந்த படத்தில் பா.ரஞ்சித் கதைக்களத்தை நன்றாக கையாண்டுள்ளதாகவும், 70களில் இருந்த வடசென்னையை கண்முன் காட்டியுள்ளதாகவும் பாராட்டுக்கள் குவிந்தது.
அதேசமயத்தில் படத்தில் திமுகவின் கட்சி கொடி மற்றும் சின்னம் பயன்படுத்தப்பட்டது, திமுகவை புகழ்வது போலவும், அதிமுக மற்றும் எம்.ஜி.ஆரை அவமதிப்பது போலவும் வசனங்கள் இடம் பெற்றது அதிமுகவினரை கடுப்பேற்றியது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ‘சார்பாட்டா பரம்பரை’ படம் தொடர்பாக இயக்குனர் பா. ரஞ்சித்துக்கு அதிமுக வழக்கறிஞர் பாபுமுருகவேல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் வரலாற்று படம் என்ற பெயரில் எடுக்கப்பட்ட சார்பட்டா பரம்பரை படத்தில் உண்மைக்கு புறம்பான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், அந்தக் காட்சிகள் அனைத்தும் பொய்யானவை என மக்களிடம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு அதிமுக சார்பில் அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல உண்மையை ஒப்புக்கொள்ளா விட்டால் அவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும் அதிமுக தயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.