• Thu. Apr 18th, 2024

சொன்னீங்களே! செஞ்சீங்களா!!… அதிமுகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்…!

By

Aug 16, 2021

அதிமுக ஆட்சிக்கு வரும் போது கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை என மிகப்பெரிய பட்டியலையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது, தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்குவதற்காகத்தான் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதா..? என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்எல்ஏவுமான ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பினார். அதற்கு விரிவாக பதிலளித்த முதலமைச்சர் அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்ட வாக்குறுதிகள் குறித்தும் காரசாரமாக எடுத்துரைத்தார்.

பேரவையில் முதல்வர் பேசியதாவது: நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நீங்கள் தந்த வாக்குறுதிகளை, உறுதிமொழிகளை நாங்களும் மறக்கவில்லை நாட்டு மக்களும் மறக்கவில்லை. அவற்றில் சிலவற்றை நிறைவேற்றியிருக்கிறீர்கள் பலவற்றை நீங்கள் நிறைவேற்றவில்லை. அதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.


உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், இலவச செல்போன் தரப்படும் என்று சொன்னீர்கள்; தந்தீர்களா?, ஆவின் பால் பாக்கெட் விலை 25 ரூபாய் என்று சொன்னீர்கள்; கொடுத்தீர்களா?, ஏழை மக்களுக்கு அம்மா மினரல் வாட்டர் இலவசமாகத் தரப்படும் என்று சொன்னீர்களே? யாருக்காவது கொடுத்திருக்கிறீர்களா? குறைந்த விலையிலே, அவசியமான மளிகைப் பொருட்கள் தரப்படும் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். அது கொடுக்கப்பட்டதா? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.

அனைவருக்கும் அம்மா வங்கி அட்டை கொடுப்போம் என்று உறுதி கொடுத்தீர்கள். அந்த வாக்குறுதி என்ன ஆயிற்று? கோ-ஆப்டெக்ஸ் துணிகள் வாங்க 500 ரூபாய் கூப்பன் தரப்படும் என்று சொன்னீர்கள், அதைக் கொடுத்தீர்களா? பண்ணை மகளிர் குழுக்கள் அமைப்போம் என்றீர்கள், அதை அமைத்திருக்கிறீர்களா? அனைத்துப் பழங்களுக்குமான சிறப்பு அங்காடிகளை உருவாக்குவோம் கட்டித் தருவோம் என்று சொன்னீர்கள். எங்கேயாவது கட்டிக் கொடுத்திருக்கிறீர்களா? அனைத்துப் பொது இடங்களிலும் wi-fi வசதி ஏற்படுத்தித் தருவோம் என்று சொன்னீர்கள், அப்படி வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிற இடத்தை எங்கேயாவது காட்டுங்கள். டாக்டர் அம்பேத்கர் பவுன்டேஷன் அமைக்கப்படும் என்று சொன்னீர்கள். அதை அமைத்தீர்களா? பட்டு-ஜவுளிப் பூங்காவை உருவாக்குவோம் என்று சொன்னீர்களே, அதை எங்கேயாவது உருவாக்கியிருக்கிறீர்களா? சென்னையிலே மோனோ-இரயில் விடப்படும் என்று சொன்னீர்கள். அதற்குப்பிறகு தலைவர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த மெட்ரோ இரயில் திட்டத்தைத்தான் நிறைவேற்றினீர்கள் என சொன்னீங்களே செஞ்சீங்களா? என மிகப்பெரிய பட்டியலையே வாசித்து காட்டினார்.

உங்கள் ஆட்சியில் இதைச் செய்யவில்லையே, செய்யவில்லையே என்று நான் கேட்டதற்கு அதேபோன்று நாங்களும் செய்யாமல் இருப்பதற்ககாக இதைச் சொல்கிறோம் என்று யாரும் கருத வேண்டாம். நிச்சயமாக, உறுதியாக அதிலேயிருக்கக்கூடிய முறைகேடுகளை எல்லாம் களைந்து, இருக்கக்கூடிய நிதிப் பற்றாக்குறையையும் சரிசெய்து, உறுதியாக தேர்தல் நேரத்தில் வழங்கியிருக்கக்கூடிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதுதான் எங்களுடைய இலட்சியம் – அதுதான் எங்களுடைய பணி. எனவே, யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் வரவேண்டிய அவசியம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *