
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் – பதவி விலகிய அதிபர்
ஆப்கானிஸ்தான் தலைநகரை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அதிபர் அஷ்ரப் கானி பதவி விலகினார். இதையடுத்து இடைக்கால தலைவராக அலி அகமது ஜலாலி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1989ல் சோவியத் படைகள் வெளியேறியபிறகு நடந்த உள்நாட்டுப் போரில் உருவானவர்கள் தான் தாலிபான்கள். பாகிஸ்தான் எல்லைப்பகுதியிலும், தென்மேற்குப் பகுதியிலும் இவர்களில் பலர் இருந்தார்கள். ஊழலை ஒழித்து பாதுகாப்பை உறுதிப்படுத்துதாக இவர்கள் உறுதிமொழி எடுத்திருக்கிறார்கள். 1998க்குள் கிட்டத்தட்ட முழு ஆஃப்கானிஸ்தானையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தார்கள்.
ஷரியா என்ற இஸ்லாமிய சட்டத்தின் தீவிர வடிவம் ஒன்றை அமல்படுத்தி, கொடூரமான தண்டனைகளை அறிமுகப்படுத்தினார்கள். ஆண்கள் தாடி வளர்க்க வேண்டும், பெண்கள் முழு உடலையும் மறைக்கும் புர்கா அணியவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். சினிமாவும் தொலைக்காட்சிகளும் இசையும் தடை செய்யப்பட்டன.
பதவியிலிருந்து விலக்கப்பட்டபின்பு பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் இவர்கள் கூடினார்கள். 2001க்குப் பிறகான காலகட்டத்தை கவனித்தால், முன்பு எப்போதையும் விட இன்று மிக வலுவானவர்களாக அவர்கள் மாறியிருக்கிறார்கள்.
வாஷிங்டனையும் நியூயார்க்கையும் குறிவைத்த 9/11 தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காக அமெரிக்கா களம் இறங்கியது. 3000 பேர் இறந்த 9/11 தாக்குதலுக்கு ஒஸாமா பின் லேடன் தலைமையிலான இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான அல்-கொய்தாவே காரணம் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
ஆஃப்கானிஸ்தானில் 1996ம் ஆண்டிலிருந்து பதவியில் இருந்த தாலிபன்களின் பாதுகாப்பில் பின்லேடன் இருந்தார். அவரை ஒப்படைக்கத் தாலிபான்கள் மறுத்தபோது, அமெரிக்கா அதை ராணுவரீதியாக எதிர்கொண்டது. தீவிரவாத அச்சுறுத்தலை அழிக்கவும் ஜனநாயகத்துக்கு ஆதரவு தரவும் தாலிபான்களைப் பதவியிலிருந்து இறக்கியது. சூழ்நிலையிலிருந்து நழுவிய தீவிரவாதிகள், பின்னர் ஒன்றுசேர்ந்தார்கள்.
நேட்டோ ஆதரவாளர்கள் அமெரிக்காவுடன் இணைந்தனர். 2004ல் ஆஃப்கானிஸ்தானில் புதிய அரசு ஆட்சிக்கு வந்தது. ஆனால் கொடூரமான தாலிபன் தாக்குதல் தொடர்ந்து நடந்தன. 2009ல் அதிபர் பராக் ஒபாமா நடத்திய “ட்ரூப் சர்ஜ்” தாலிபான்களைக் கொஞ்சம் கட்டுக்குள் வைத்தது என்றாலும் அது நெடுங்காலம் நீடிக்கவில்லை. 2001க்குப் பிறகான மிக மோசமான காலகட்டமாக 2014 கருதப்படுகிறது. அந்த ஆண்டு நேட்டோவின் சர்வதேச ராணுவங்கள் தங்கள் படையெடுப்பை நிறுத்திக்கொண்டன. பாதுகாப்பின் பொறுப்பு ஆஃப்கானிஸ்தான் ராணுவத்திடம் விடப்பட்டது. இது தாலிபனுக்கு சாதகமாக அமையவே, அவர்கள் மேலும் இடங்களைக் கைப்பற்றினர்கள்.
அமெரிக்காவுக்கும் தாலிபனுக்கும் இடையே நடந்த அமைதிப்பேச்சுவார்த்தைகள் முதலில் திட்டவட்டமாகத் தொடங்கப்படவில்லை. ஆரம்பகட்டத்தில் ஆஃப்கன் அரசும் இதில் பெரிதும் கலந்துகொள்ளவில்லை. படைகளை விலக்கிக்கொள்வது தொடர்பான உடன்படிக்கை கத்தாரில் 2020 பிப்ரவரியில் எட்டபப்ட்டது. ஆனாலும் தாலிபன் தாக்குதல்கள் நிற்கவில்லை. ஆஃப்கான் பாதுகாப்புப் படையினர் மீதும் பொதுமக்கள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். திட்டமிட்ட படுகொலைகள் நடந்தேறின. அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலப்பரப்பின் அளவு அதிகரித்தது.
இருபது ஆண்டுகாலப் போருக்குப் பிறகு, அமெரிக்காவும் 2001ல் அவர்களால் பதவியிறக்கப்பட்ட தாலிபனும் ஒரு உடன்படிக்கைக்கு வந்திருக்கின்றன. வெளிநாட்டுப் படைகள் ஆஃப்கானிஸ்தானிலிருந்து வெளியேறத் தொடங்கின.
இந்தப் போர் பலநூறு மக்களைக் கொன்றதோடு பல லட்சம் பேரைப் புலம்பெயரவும் வைத்திருக்கிறது. மேற்கு உலகை அச்சுறுத்தும் தீவிரவாதிகளுக்கு ஆஃப்கானிஸ்தானில் இடம் தர மாட்டோம் என்று தாலிபன் வாக்களித்திருக்கிறது. ஆனால் கடந்த சில வாரங்களில் தாலிபான் ஆஃப்கானிஸ்தானில் உள்ள அதிகமான நிலப்பரப்பைக் கைப்பற்றியிருக்கிறது. ஆஃப்கானிஸ்தானின் ராணுவ வீரர்கள், வலுவிழந்த தனது அரசாங்கத்தைக் காப்பாற்றும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறி வருவதையொட்டி தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சமீபத்தில் முக்கிய மாகாண தலைநகரங்களையும் அந்நாட்டின் 2-வது பெரிய நகரான கந்தகாரையும் கைப்பற்றினர். அடுத்து தலைநகர் காபூலை குறிவைத்த தலிபான்கள் அந்த நகரை நோக்கி முன்னேறினர். முதலில் காபூலை சுற்றியுள்ள மாகாண பகுதி மற்றும் நகரங்களை தங்கள் வசம் கொண்டு வந்தனர். தலிபான்கள் முன்னேறி வருவதை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரால் தடுக்க முடியவில்லை. இன்று தலிபான்கள் காபூல் நகருக்குள் நுழைந்தனர். நாங்கள் சண்டையிட விரும்பவில்லை, சமாதான முறையில் அதிகாரத்தை கைப்பற்ற விரும்புவதாக தலிபான் அமைப்பு தெரிவித்தது
இந்நிலையில், காபூல் நகரை தங்கள் வசமாக்கிய தலிபான்கள் நாட்டின் அதிகாரத்தையும் கைப்பற்றினர். தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து இடைக்கால தலைவராக அலி அகமது ஜலாலி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் அலி, அரசு ராணுவம் காபூல் நகரில் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்று வருதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
