அரியலூர் மாவட்டத்தில் தனியாக சென்ற பெண்களிடம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்து, அவனிடமிருந்து 31 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளதாக அரியலூர் எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் வி.கைகாட்டி, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனியாக நடந்து சென்ற பெண்கள் உள்ளிட்ட பலரிடம் தொடர் வழிப்பறி நடந்ததையொட்டி மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை ஒன்றை அமைத்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் தனிப்படை போலீசார் தீவீர தேடுதலில் ஈடுபட்டு தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட, அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகேயுள்ள இடையக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த புரட்சிதமிழனை ஜூலை 19ஆம் தேதி இரவு கைது செய்தனர். மேலும் அவனிடமிருந்து 31 சவரன் தங்கநகைகளை மீட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா சிறப்பு தனிப்படை போலீசாருக்கு பாராட்டு சான்றிதழும், சன்மானமும் அளித்து கெளரவித்தார். மேலும் செய்தியாளர்களிடம் கூறும்போது கைப்பற்றபட்ட நகைகள் உரியவரிடம் ஒப்படைக்கபடும் என்றும் மேலும் மாவட்டங்களில் குற்ற சம்பவங்கள் நடைப்பெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்தார். அரியலூர் மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் கைது செய்ததன் மூலம் பொதுமக்கள் காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.