• Mon. Mar 17th, 2025

Zing bus நிறுவனம் பயணிகளிடம் மோசடி

ByKalamegam Viswanathan

Mar 2, 2025

Zing bus நிறுவனம் பயணிகளிடம் பணம் பெற்றுகொண்டு நீண்டநேரம் காத்திருக்க வைத்து பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டதாக கூறி, பயணிகளிடம் மோசடி செய்ததாக மாட்டுத்தாவணி காவல்நிலையத்தில் பயணிகள் புகார் எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து சென்னை மற்றும் பாண்டிச்சேரி கேரளா , ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டுவருகிறது

இதில் ஏராளமான பேருந்துகள் ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்யப்பட்டு மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை அழைத்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்றிரவு 10 மணிக்கு சென்னை செல்லும் ZINGBUS என்ற நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் மதுரையிலிருந்து சென்னை செல்வதற்காக ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்துள்ளனர் .

பேருந்து புறப்படுவதாக முன்பாக பயணிகளுக்கு குறுஞ்செய்தி மூலமாக தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அனைத்து பயணிகளும் மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்தனர்

அப்போது பேருந்து இல்லாத நிலையில் பணியாளர்களை தொடர்பு கொண்டபோது 10 நிமிடத்தில் வரும் என கூறி தாமதப்படுத்தியுள்ளனர். பின்னர் தொடர்ந்து பயணிகள் ZINGBUS நிறுவனத்தின் பணியாளர்களுக்கு தொடர்ந்து தொடர்பு கொண்டபோது உரிய பதிலளிக்காமல் இருந்துள்ளனர்.

பின்னர் திடீரென 2 மணி நேரம் கழித்து பேருந்து சேவை ரத்து செய்யப்படுவதாக அந்தந்த பயணிகளுக்கு ஜிங்க் பஸ் நிறுவனத்தின் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பபட்டதோடு, பேருந்து கட்டணத்திற்கான தொகையை ஒரு வாரத்திற்குள் பெற்றுக் கொள்ளலாம் எனவும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது

இதனைகண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் ஜிங்க் பஸ் நிறுவனம் தங்களை 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வைத்து ஏமாற்றிவிட்டதாக கூறி, மதுரை மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் காரணமாக மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பயணிகள் பேருந்து நிறுவனத்தின் அலுவலகத்தின் முன்பாக இரவில் நீண்டநேரம் காத்திருந்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

பயணிகளிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு திடீரென பேருந்து சேவை ரத்து செய்யப்படுவதாக கூறுவதால் தங்களால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டதால் ஜிங்க்பஸ் நிறுவனம் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஆம்னி பேருந்து நிலையத்தில் ZINGBUS நிறுவனத்தின் மீது பயணிகளே புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்து தொடர்ச்சியாக ஏராளமான பேருந்துகளும் வாடிக்கையாளர் பயணிகளை குறிப்பிட்ட நேரத்திற்கு அழைத்துச் செல்லாமல் தாமதப்படுத்தி செல்வதோடு பேருந்து முழுவதிலும் பயணிகள் ஏறினால் மட்டுமே பேருந்து புறப்படுவோம் என சில நேரங்களில் கூறுவதால் ஏராளமான பயணிகள் தொடர்ந்து மோசடிக்கு உள்ளாகிவருகின்றனர். மேலும் இது போன்ற திடீர்ரத்து பாதிப்பாலும் பயணிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்

எனவே போக்குவரத்து துறை இது தொடர்பாக உரிய கண்காணிப்பு பணிகள் மற்றும் புகார் அளிப்பதற்கான எண் உள்ளிட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் பயணிகள் வெளிப்படுத்தியுள்ளனர்