• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

யூடியூபர் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து..!

Byவிஷா

Oct 7, 2023

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ உத்தரவிட்டுள்ளார்.
கோவையை சேர்ந்த பிரபல யூடியூப் பிரபலம் டி.டி.எப் வாசன், இணையத்தில் விலையுயர்ந்த பைக்குகளில் சாகசம் செய்வது, வெளியூர் பயணங்கள் மேற்கொள்வது, அதிவேக பைக் பயணம் உள்ளிட்ட பல்வேறு விடீயோக்களை பதிவிட்டு லட்சக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்துள்ளார். இவர் கடந்த மாதம் 17ஆம் தேதி சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது, காஞ்சிபுரம் மாவட்டம் பாலுச்செட்டிசத்திரம் அருகே, தாமல் ஊர் பகுதி நெடுஞ்சாலையில் தனது பைக்கில் சாகசம் செய்ய முயற்சித்த போது, அப்போது நிலை தடுமாறி அருகில் உள்ள சாலையோர பள்ளதாக்கில் விழுந்தார்.
இதில் டி.டி.எப் வாசனுக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டு, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பிறகு, சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அவர் மீது பாலுச்செட்டிசத்திரம் காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் விதமாக வாகனத்தை இயக்கியது. சாலை விதிகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டிடிஎப்.வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே டிடிஎப் வாசன் மீது பல்வேறு புகார்கள் உள்ளன. காஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய விவகாரத்தில் கைதாகி புழல் சிறையில் உள்ளார்

இந்த நிலையில், நேற்று முன்தினம், பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது. மேலும், நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்திய வழக்கில் ஜாமின் கோரிய மனு தள்ளுபடி செய்து பைக்கை எரித்துவிட வேண்டும், யூடியூப் தளத்தை மூட வேண்டும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ. உத்தரவு பிறப்பித்துள்ளார். 2033-ஆம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி வரை ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. டி.டி.எஃப் வாசன் தொடர்ந்து அதிவேகமாக வாகனங்களை ஓட்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.