தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோர் நாளை முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்’ என, ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீபாவளிக்கு இன்னும் 3 மாதங்களுக்கு மேல் நாட்கள் இருந்தாலும் கூட நாளை முதல் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி, இணையதளம் மூலம் 120 நாட்களுக்கு முன்பு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 24-ம் தேதி (திங்கட்கிழமை) வருகிறது. எனவே, 21-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்றே சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய பலரும் திட்டமிடுவர்.
அதன்படி, அக்டோபர் 21-ம் தேதி பயணிக்க விரும்புவோர் நாளை (23-ம் தேதி) முன்பதிவு செய்யலாம். அக்டோபர் 22-ம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் நாளை மறு தினம் (24-ம் தேதி) முன்பதிவு செய்யலாம். அக்டோபர் 23-ம் தேதி பயணிக்க விரும்புவோர் வரும் 25-ம் தேதி முன்பதிவு செய்யலாம்.இது குறித்து, ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் கூறியதாவது: ‘தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு செல்வோர் நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.கொரோனா பாதிப்பு தற்போது குறைவாக இருப்பதால், வரும் தீபாவளிக்கு அதிகளவில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வர் என எதிர்பார்க்கிறோம்.பெரும்பாலான பயணிகள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து வருவதால், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தின் தரத்தை சமீபத்தில் உயர்த்தி உள்ளோம். தொழில்நுட்ப கோளாறு ஏற்படாதவாறு தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’ என்று தெரிவித்தனர்.