தமிழகத்தில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், தாம்பரம் அருகேயுள்ள முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வரதராஜபுரம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேற முடியாத பொதுமக்கள், படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். முடிச்சூர்-மணிமங்கலம் சாலை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டது.இதேபோல, மேற்கு தாம்பரம் பாரதி நகர், கிருஷ்ணா நகர், திடீர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. கடந்த 4 நாட்களாக மழைநீரை வெளியேற்றும் பணியில் யாரும் ஈடுபடவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து, அந்தப் பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தாம்பரம்-முடிச்சூர் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்தபோலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்நிலையில், அங்கு வந்த தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜவை முற்றுகையிட்ட பொதுமக்கள், தங்களது கோரிக்கை குறித்து வலியுறுத்தினர். மழை நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டனர்.