• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

உலக மருந்தாளுநர் தினம் கோலாகலம் மாணவர் பேரணி, மரக்கன்று நடுதல் மூலம் விழிப்புணர்வு..,

ByPrabhu Sekar

Sep 25, 2026

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் மருந்தியல் பீடம் சார்பில், உலக மருந்தாளுநர் தின விழா சிறப்பாக நடைபெற்றது.

“ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக மருந்தாளுநர்களை வலுப்படுத்துதல்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த நிகழ்வில் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மருத்துவத் துறையினர் உற்சாகமாக பங்கேற்றனர்.

விழாவை முன்னிட்டு காலை நடைபெற்ற மாணவர் விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு, மருந்தாளுநர்களின் சேவை மற்றும் சமூகப் பங்களிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதனைத் தொடர்ந்து வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பின்னர் நடைபெற்ற தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து சிறப்பு உரைகள், புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்து நிகழ்வு மற்றும் மாணவர்களுக்கான ஊக்கமளிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும், பார்மா வினாடி-வினா போட்டி, டிஜிட்டல் ரீல் தயாரிப்பு போட்டி, ரங்கோலி போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களின் திறமைகள் வெளிக்கொணரப்பட்டன.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, டேப்லெட்ஸ் இந்தியா நிறுவனத்தின் மனிதவள பொது மேலாளர் டாக்டர் எஸ். விஸ்வமாணிக்கம், மருந்துத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் மனிதவள மேம்பாடு குறித்த சிறப்பு சொற்பொழிவை வழங்கினார். இந்த உரை மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய மருந்தியல் பீட டீன் டாக்டர் என். தீபா, மருந்தாளுநர் துறையில் முறையான கல்வி மற்றும் அங்கீகாரம் பெற்றவர்களே பணியாற்ற வேண்டும் என்றும், உரிய தகுதி இல்லாமல் மருந்தகங்களில் பணியாற்றுபவர்கள் நோயாளிகளுக்கு சரியான மருந்துகளை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்தார். இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் என அவர் கூறினார்.

உலக மருந்தாளுநர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழா, மருந்தாளுநர்களின் சமூகப் பங்களிப்பை எடுத்துரைப்பதோடு, மாணவர்களிடையே தொழில்முறை ஆர்வம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்த்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.