புதுக்கோட்டை, நவம்பர் 11, குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஆகியோருக்கு 196447 கேக்குகள் வழங்கப்பட உள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்தியாவின் முதல் பிரதமரான மறைந்த ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 14 அன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் , ஆசிரியரல்லாத பணியாளர்கள் ஆகியோருக்கு கேக் வழங்கிடவும், மேலும் மாணவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்து மடல்கள் வழங்கிடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1680 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 187055 மாணவ, மாணவியர்கள், 8896 ஆசிரியர்கள், 496 ஆசிரியரல்லாத பணியாளர்கள் என ஆக மொத்தம் 196447 கேக்குகள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 187055 மாணவர்களுக்கான வாழ்த்து மடல்களும் வழங்கப்பட உள்ளன.
இந்த ஆண்டு குழந்தைகள் தினம் பள்ளிகள் விடுமுறை நாளன்று வருவதால் அதற்கு முதல் நாளிலேயே கேக்குகள் மற்றும் வாழ்த்து மடல்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு நேற்று 10-11-2026 அன்று புதுக்கோட்டை சிப்காட் அருகில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக புதுக்கோட்டை வட்ட கிடங்கிற்கு அனைத்து கேக்குகளும் வந்தடைந்தது. இக்கேக்குகளை இங்கிருந்து பாதுகாப்பாக வாகனங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கிடும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 10 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவரால் பார்வையிடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
பின்னர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் வாகனங்களில் பள்ளிகளுக்கு கொண்டு சென்று தலைமையாசிரியர்களிடம் கேக் மற்றும் வாழ்த்து மடல்களை வழங்கி பீரோவில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், குளவாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைத் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கேக் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்து மடல்கள் சுகாதாரமான முறையில் பீரோவில் பாதுகாப்பாக வைத்திருக்க மாவட்டம் முழுதும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 13- ந்தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேக் மற்றும் வாழ்த்து மடல்கள் வழங்குவதை தொடங்கிவைத்த பிறகு புதுக்கோட்டை மாவட்டத்திலும் கேக் மற்றும் வாழ்த்து மடல்கள் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.