கோவையில் உணவகத்திற்குத் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் உணவருந்த வந்த நபர் ஒருவர், அருகில் இருந்த வாடிக்கையாளரின் செல்போனை அசைக்காமல் திருடிச் சென்ற அதிர்ச்சிச் சம்பவம் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது.
கோவை, சின்னியம்பாளையம் பகுதியில் ‘ஆதித்யா செட்டிநாடு’ உணவகம் இயங்கி வருகிறது. கடந்த தீபாவளிக்கு முந்தைய சனிக்கிழமையன்று ஜெயக்குமார் என்பவர் தனது நண்பருடன் அந்த உணவகத்திற்குச் சென்று உணவருந்திக் கொண்டு இருந்தார். அப்போது, அவர்களுக்கு அருகே உள்ள மேஜையில் கணவன், மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்த குடும்பத்தினர் அமர்ந்து உணவருந்தி உள்ளனர்.
உணவு அருந்தி முடிந்ததும் ஜெயக்குமாரின் பக்கத்து மேஜையில் இருந்த தம்பதியினர் கைகளைக் கழுவி விட்டு வெளியேறினர். சிறிது நேரத்தில் சாப்பிட்டு முடித்த ஜெயக்குமார், தனது மேஜையின் மீது வைத்து இருந்த செல்போனை எடுக்க முயன்ற போது, போன் மாயமாகி இருந்ததைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக இது குறித்து உணவக ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு இருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.
அதில் பக்கத்து மேஜையில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்ட நபர், கை கழுவிவிட்டுத் திரும்பி வரும் போது ஜெயக்குமாரின் மேஜையைக் கூர்ந்து கவனித்து உள்ளார்.
ஜெயக்குமாரும் அவரது நண்பரும் சாப்பிடுவதில் கவனமாக இருந்ததைச் சாதகமாகப் பயன்படுத்திய அந்த நபர், நைஸாக மேஜையில் இருந்த செல்போனை எடுத்துத் தனது பின்புறப் பாக்கெட்டில் (Back Pocket) மறைத்து வைத்துக் கொண்டு சர்வ சாதாரண வெளியேறி உள்ளார்.
குழந்தைகள் மற்றும் மனைவியுடன் வந்த இடத்திலேயே அந்த நபர் இத்தகைய திருட்டுச் செயலில் ஈடுபட்டது அங்கு இருந்தவர்களை முகச்சுளிப்புக்கு உள்ளாக்கியது.

சி.சி.டி.வியில் பதிவான காட்சிப் பதிவுகளுடன் ஜெயக்குமார் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் குடும்பத்தோடு வந்து கைவரிசை காட்டிச் சென்ற அந்த நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.