• Sat. Apr 20th, 2024

கார் மோதி தொழிலாளி சாவு: சாலையில்
உடலை வைத்து உறவினர்கள் மறியல்

பள்ளிப்பட்டில் கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். சாலையில் உடலை வைத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா மேல்நெடுங்கல் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு (வயது 40). கூலி தொழிலாளி. இவர் கடந்த 4-ந்தேதி வீட்டின் அருகே சாலையை கடந்தபோது, அந்த வழியாக மிக வேகமாக வந்த கார் ஒன்று இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அன்புவை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று முன்தினம் அன்பு இறந்தார். பின்னர் அவரது உடல் பிரேதபரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் நேற்று பொதட்டூர்பேட்டை- திருத்தணி சாலையில் அன்புவின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ், சப்- இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *