• Thu. Apr 25th, 2024

மாற்று ஜாதி காதல் கணவனுக்கு துணைபோகும் மகளிர் காவல் நிலையம்…

சேலத்தில் தொடர்ச்சியாக பட்டியலின மக்களின் திருமணத்தை தடுத்து ஒருதலைபட்சமாக செயல்படுகிறது சேலம் மாநகர காவல்துறை. காதலித்து திருமணம் செய்து கொண்ட பட்டியல் இன பெண்ணை, திருமணம் செய்து கொண்ட மாற்று ஜாதி காதல் கணவனுக்கு துணைபோகுகிறது சேலம் அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம். காதல் கணவனுடன் சேர்த்துவைக்க தவறும்பட்சத்தில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பட்டியலின பெண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேலம் உடையாப்பட்டி கக்கன் காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வி. பட்டியல் இனத்தைச் சேர்ந்த படித்த பட்டதாரியான இவர், உடையாப்பட்டியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகிறார். சேலம் உடையாப்பட்டி கோம்பைக்காடு பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். தனியார் வங்கியில் வங்கி கணக்கு வைத்து அதன் அடிப்படையில் அடிக்கடி வங்கிக்கு சென்று வரும்போது செல்விக்கும் பிரபுவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மலர்ந்து. இருவரும் வெவ்வேறு ஜாதி என்பதை மறந்து கடந்த 2017ஆம் ஆண்டு வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனை அடுத்து இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்று வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து செல்வியின் வீட்டிற்கு விஷயம் தெரிய, வேறு வழியில்லாமல் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி தனியாக வீடு எடுத்து 7 மாதங்களாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

அப்போது இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சனையின் காரணமாக பிரபு வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த செல்வி கணவனின் வீட்டிற்கு சென்று தனது கணவனை சேர்த்து வைக்குமாறு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுதுதான் இவர் பட்டியில் அமைப்பை சேர்ந்த பெண் என்பதும், மகன் மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இதை அடுத்து பிரபுவின் பெற்றோர்கள் இவர்களது திருமணத்தை ஏற்க மறுத்து சேலம் அம்மாபேட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கின்றனர். இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த சேலம் அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சிவகாமி மற்றும் உதவி ஆய்வாளர் மோகனாம்பாள் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டார். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து சிஎஸ்ஆர் மட்டும் பதிவு செய்து செல்வியை அனுப்பி உள்ளனர்.

இதனையடுத்து தான் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிஎஸ்ஆர் மட்டும் பதிவு செய்த சேலம் அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு, சேலம் மாநகர காவல் ஆணையர் உதவி ஆணையர் உட்பட அனைத்து தரப்பிலும் புகார் அளித்துள்ளார். எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனிடையே இந்த பிரச்சனை எழுந்த பிறகு, பிரபு தலைமறைவாகி இருக்கிறார். இது சம்பந்தமாக காவல்துறையினர் சிஎஸ்ஆர் மீது எப்ஐஆர் என்ற முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யாமலேயே இருந்துள்ளனர். இதனை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி சம்பந்தப்பட்ட வழக்கின் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படுகிறது. என்றாலும் சம்பந்தப்பட்ட வன்கொடுமை செய்த குற்றவாளியை சேலம் அம்மாபேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கைது செய்யவில்லை. காரணம் அவரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைக்காமல் செயல்பட்டுக் கொண்டிருப்பது அம்பலமாகியுள்ளது.

இதுகுறித்து தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு சென்னை டிஜிபி அலுவலகம் உட்பட சேலம் மாநகர காவல் துறையிடம் புகார் தெரிவித்தும், தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே செல்வி, சேலம் வழக்கறிஞர் முருகேசன் என்பவரை நாடியுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், மூன்று ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்தோம். வீட்டை விட்டு வெளியேறி 7 மாதங்கள் குடும்பம் நடத்தி காதல் கணவனை பிரிந்த எனக்கு, சேலம் அம்மாபேட்டை மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு தனக்கு துரோகம் வருகின்றனர். இதே நிலை நீடித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய நான் தற்போது மிகுந்த மன உளைச்சல், மன வேதனையை இருக்கின்றேன். தனது கணவருடன் சேர்த்து வைக்க தவறும் பட்சத்தில் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் முருகேசன் கூறுகையில், பாதிக்கப்பட்ட செல்வி அளித்த சிஎஸ்ஆர் மீது உரிய நடவடிக்கை சேலம் அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் எடுத்து இருந்தால் பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் வசித்து வந்து இருப்பார். ஆனால் ஆய்வாளரும், உதவி ஆய்வாளரும் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு கொண்டு இருகிறார்கள். பட்டியலின மக்களின் காதல் திருமணத்திற்கு செய்யும் துரோகம் என்று குற்றம் சாட்டி, வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படும் சேலம் அம்மாபேட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சிவகாமி மற்றும் உதவி ஆய்வாளர் மோகனாம்பாள் ஆகியோர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஏற்கனவே பட்டியலின மக்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி காதல் திருமணம் செய்து கொண்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடையும் தருவாயில் காவல்துறையினர் பட்டியல் இன மக்களை ஒடுக்கி மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் சேலம் மாநகர காவல் துறையை எதிர்த்து விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் வழக்கறிஞர் முருகேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் எவ்வளவு லஞ்சம் பெறுகிறார்கள் என்பதை ஒரு பட்டியல் வெளியீட்டு சேலம் மாநகரம் உட்பட மாவட்ட காவல் துறையினர் இடையே மிகப்பெரிய ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். நிலைமை இப்படியிருக்க ஒரு பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு எதிராக உயர்சாதி வகுப்பை காப்பாற்ற முயற்சிக்கும் சேலம் மாநகர காவல் துறைக்கு உட்பட்ட சேலம் அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் லஞ்சம் பெற்றுக்கொண்டு வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ஆதரவாக லஞ்சம் பெற்றுக்கொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தற்பொழுது வரை நீதி கிடைக்காமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ வெளியிட்ட அறிக்கையை போன்று, சேலம் மாநகர காவல் ஆணையர் தனக்கு கீழ் பணியாற்றும் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் எவ்வளவு லஞ்சம் பெற்றுக்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற பட்டியலை வெளியிடுவாரா என்ற எண்ணம் என்ற கேள்வி மக்களிடையே எழுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *