• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

பட்டாசுத் தொழிற்சாலைகளை திறக்கக் வலியுறுத்தி பெண் தொழிலாளர்கள் முற்றுகை..,

ByK Kaliraj

Aug 25, 2026

விருதுநகர் மாவட்டம் முழுவதும் பட்டாசு த் தொழிற் சாலையில் நடந்து வரும் விபத்தைச் சுட்டிக்காட்டி தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு இயங்கி வரும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம், தொழிலகப் பாதுகாப்புத் துறை, காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை ஆகியனவற்றின் அலுவலர்கள் ஒருங்கிணைந்து கடந்த சில மாதங்களாக விருதுநகர் மாவட்டம் முழுவதிலுமுள்ள பட்டாசுத் தொழிற்சாலைகளில் நேரடி ஆய்வு மேற்கொண்டதில் 300-க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மூடப்பட்டிருந்தது.

இதில் தமிழக அரசின் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழிலகப் பாதுகாப்புத் துறை ஆகியவற்றின் சார்பாக 200- பட்டாசுத் தொழிற்சாலைகளும், மத்திய அரசின் வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறை சார்பில் 80-க்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலைகளின் மீதும் நடவடிக்கைகள் எடுத்து மூடப்பட்டிருந்தது. தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்ததால் பல்லாயிரக்கணக்கான ஆண்- பெண் தொழிலாளர்கள் வேலையிழந்து, வருமானமின்றி, வாழ்வாதார மில்லாமல் தவித்து வருகின்றனர். இதற்கிடையே நடத்தப்பட்ட தொடர் போராட்டம் காரணமாக தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்ததின் விளைவில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிற் சாலைகளை மீண்டும் திறக்க விருதுநகர் மாவட்டம் அனுமதியளித்துள்ள நிலையில், எஞ்சியுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்படாமல் மூடிக் கிடைக்கிறது.

இதற்கிடையே ஒன்றிய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு பூட்டிக் கிடக்கும் 80-க்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலைகளை திறக்கலாமென்று விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி, வலியுறுத்திய போதிலும், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் பூட்டிக் கிடக்கின்ற பட்டாசு த் தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்காமல் காலதாமதப் படுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த பெண் தொழிலாளர்கள் ஆய்வு என்ற பேரில் பூட்டிக் கிடக்கும் பட்டாசுத் தொழிற்சாலைகளை மீண்டும் திறந்து தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும், பட்டாசு தொழில் பிரச்சனையில் தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினர்.

அதனைத் தொடர்ந்து மத்திய அரசின்( பெசோ) பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு நிறுவன அலுவலகத்தில் பட்டாசுக் கூலித் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பாக கோரிக்கை மனுக்கொடுக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட மத்திய அரசு அலுவலர்கள் ஒரு வார காலத்தில் நல்லதொரு தீர்வு கண்டு முடிக் கிடக்கின்ற பட்டாசுத் தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படு மென்று உறுதியளித்ததின் பேரில் முற்றுகை போராட்டம் நடத்திய அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

ஒரு வார காலத்திற்குள் மூடப்பட்டிருக்கும் பட்டாசு தொழிற் சாலைகள் அனைத்தையும் மீண்டும் திறக்க மாநில, ஒன்றிய அரசுகள் நடவடிக்கை எடுக்காவிடில் உண்ணாவிரதப் போராட்டம் போன்ற பல கட்டப் போராட்டங்கள் நடத்தப் போவதாக பட்டாசு கூலி தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.