கனடா நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீண்டகாலமாக பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹர்ஜித் சஜ்ஜனுக்கு பதிலாக, அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்ஜித் சஜ்ஜனுக்கு வேறு துறை ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்நாட்டு ராணுவத்தில் எழுந்த பாலியல் அத்துமீறல் பிரச்சனையை ஹர்ஜித் முறையாக கையாளவில்லை எனப் புகார் எழுந்தது. இதனால், இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது என கூறப்படுகிறது.
‘அனிதா மிகச்சிறந்த நிர்வாகி என்பதை, அடுத்த சில மாதங்களில் மக்கள் புரிந்துகொள்வார்கள்’ என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புகழாரம் சூட்டியுள்ளார்.
‘தனக்கு இந்த வாய்ப்பை அளித்த பிரதமர் ட்ரூடோவுக்கு நன்றி எனவும், ராணுவத்தை பாதுகாப்பான ஆரோக்கியமான முறையில் இயக்க வழிவகை செய்வேன்’ என அனிதா கூறியுள்ளார்.
1967ஆம் ஆண்டு கனடாவில் பிறந்த அனிதாவின் தாயார் பஞ்சாப்பைச் சேர்ந்தவர், தந்தை ஆனந்த் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். கார்ப்பரேட் வழக்கறிஞரான இவர், கார்ப்பரேட் நிர்வாகத்தில் கைதேர்ந்தவராவார். 2019ஆம் ஆண்டு தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் ஒக்வில்லே தொகுதியில் போட்டியிட்ட அனிதா 46 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.