அதிமுக தலைமைக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்ஜிஆர் இளைஞரணி துணைச்செயலாளரும், எம்ஜிஆரின் பேரனுமான ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை ராமாபுரம் தோட்டத்தில் எம்ஜிஆர் இளைஞரணி துணைச்செயலாளரும், எம்ஜிஆரின் பேரனுமான ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தொண்டர்கள் சேர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியை தலைமையாக தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்கள் இருவரும் கட்சியை சிறப்பாக வழி நடத்துகின்றனர்.
இதனிடையே, சிலர் தனித்தனியாக பேட்டி கொடுத்து தொண்டர்களை குழப்பி வருகின்றனர். தலைமைக்கு எதிராக யார் பேசினாலும், அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். முன்னதாக சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என தெரிவித்தார். இது அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்பின், ஓபிஎஸ் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் அதிமுகவில் சிலர் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.