• Sat. Apr 20th, 2024

கையில் கோர்ட் ஆர்டரோடு.. புல்டோசர் முன் துணிச்சலாக நின்ற பிருந்தா காரத்.. சம்பவம்!

டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் இன்று கட்டிடங்கள் இடிக்கப்பட்ட போது கோர்ட் ஆர்டருடன் சிபிஎம் பிருந்தா காரத் சம்பவ இடத்திற்கு வந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.இந்த சம்பவம் வைரலாகி வருகிறது.

டெல்லியில் இன்று ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்ட கட்டிடங்கள் என்று கூறி ஜஹாங்கிர்புரி பகுதியில் உள்ள கட்டிடங்கள் பல இடிக்கப்பட்டன. அங்கு கடந்த 4 நாட்களுக்கு முன் அனுமன் ஜெயந்தியில் கலவரம் ஏற்பட்டது.

இந்துக்கள் இஸ்லாமியர்கள் இடையே ஏற்பட்ட இந்த கலவரத்தில் 8 போலீசார் காயம் அடைந்தனர். 24 இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையில் கலவரத்தில் ஈடுப்பட்ட இஸ்லாமியர்கள் ஆக்கிரமிப்பு நிலத்தில் வீடு, கட்டிடம் கட்டி இருப்பதாக பாஜக டெல்லி தலைவர்கள் புகார் வைத்தனர். இரண்டு நாட்களாக அவர்கள் இது தொடர்பாக பிரச்சாரம் செய்தனர்.இந்த நிலையில் டெல்லியில் இன்று ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்ட கட்டிடங்கள் என்று கூறி ஜஹாங்கிர்புரி பகுதியில் உள்ள கட்டிடங்கள் பல இடிக்கப்பட்டன. இதற்காக 400க்கும் அதிகமான போலீசார், 1250 துணை ராணுவ படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த கட்டிட இடிப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தேவ் மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டு இருக்கும் வீடுகளை அகற்ற உச்சநீதிமன்றம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. ஆனால் இந்த கோர்ட் ஆர்டர் கைக்கு வரவில்லை என்று கூறி, தீர்ப்பிற்கு பின்பும் டெல்லியில் வீடுகள் இடிக்கப்பட்டன. தீர்ப்பு வந்து இரண்டு மணி நேரம் கழித்தும் அங்கு இடிக்கும் பணிகள் தொடர்ந்தன.இந்த நிலையில் கோர்ட் ஆர்டர் வரவில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து கட்டிடங்களை இடித்து வாட்ச் நிலையில் சம்பவ இடத்திற்கு சிபிஎம் மொத்த தலைவர் பிருந்தா காரத் காரில் விரைந்து வந்தார். கையில் கோர்ட் ஆர்டருடன் வந்தவர்.. உடனே இடிக்கும் பணிகளை நிறுத்தும்படி கூறினார்.. நிறுத்துங்க.. கோர்ட் ஆர்டர் இருக்கு.. இடிக்காதீங்க என்று கோஷமிட்டனர்.

அதோடு துணிச்சலாக புல் டோசர் முன்பு போய் நின்று கடுமையாக கோஷம் எழுப்பினார். கோர்ட் ஆர்டர் இருக்கும் போது நீங்கள் எப்படி இதை பிடிக்கலாம் என்று கேள்வி எழுப்பினார். அதோடு புல்டோசர் முன்பு தீரமாக நின்று கொண்டு., அந்த எந்த விதமான கட்டுமானமும் இடிக்கப்படாமல் தடுத்துக்கொண்டு இருந்தார். அங்கு போலீஸாரிடமும் பிருந்தா காரத் கடும் வாக்குவாதம் செய்தார். இந்த சம்பவம் அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் நடந்த போது… டெல்லியே பரபரப்பாக இருந்த போதும் ஆளும் ஆம் ஆத்மி கட்சி சம்பவ இடத்திற்கு வரவில்லை. ஆம் ஆத்மி கட்சியினர் எந்த விதமான எதிர்ப்புகளையும் தெரிவிக்கவில்லை. டெல்லியில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களும் சம்பவ இடத்திற்கு வரவில்லை. ஆனால் சிபிஎம் மட்டுமே சம்பவ இடத்திற்கு வந்து மக்களுக்கு கோஷங்களை எழுப்பியது.

பின்னர் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே நேரில் தலையிட்டார். தலைமை நீதிபதி ரமணா உடனடியாக கோர்ட் உத்தரவை அதிகாரிகளுக்கு அனுப்பிவேண்டும் என்று உத்தரவிட்டார். உச்ச நீதிமன்ற உத்தரவு உடனடியாக டெல்லி மாநகராட்சியிடம் கொடுக்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற தடை உடனே அமலுக்கு வர வேண்டும் என்று தலைமை நீதிபதி ரமணா கோர்ட் ரிஜிஸ்டரிடம் உத்தரவிட்டார். இதன் பின்னரே அங்கு கட்டுமான இடிப்பு பணி நிறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *