பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் தயாராகி வரும் நிலையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடைபெறுவது பற்றிய முக்கிய அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை இன்று நடைபெறுகிறது. கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்து விட்டது என்று கடந்த நவம்பர் மாத இறுதியில் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் ஓமிக்ரான் பரவத் தொடங்கியது. ஜனவரி முதல் கொரோனா மீண்டும் வீரியமாக பரவத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சமாக உயர்ந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு, கொரோனா பரவலின் வேகத்தை பொறுத்து ஊரடங்கை கடுமையாக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. மாடுபிடி வீரர்களுக்கும், மாட்டின் உரிமையாளர்களுக்கும் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கவும், நேர கட்டுப்பாடு விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்த வாடிவாசல் முன்பு முகூர்த்தக்கால் நடும் பணி இன்று நடைபெற்றது. இந்த நிலையில் இன்று முதல்வர் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது.
தியேட்டர்கள், டாஸ்மாக் பார்கள், வழிபாட்டுத்தலங்கள் முற்றிலும் மூட வாய்ப்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்றுவிட்டு திரும்புபவர்களுக்கு அரசு பேருந்தில் ஜனவரி 16ஆம் தேதிக்கான முன்பதிவு நிறுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையான அன்றைய நாளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற யூகம் உள்ள நிலையில், அது குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. முதல்வரின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இன்று மாலை மிக முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது.