ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்துகொள்ள ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் திரைத்துறையில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது. அந்த வகையில், 94ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அண்மையில் நடந்தது. இந்த விழாவை தொகுத்து வழங்கிய நகைசுவை நடிகர் கிறிஸ் ராக், பிரபல நடிகர் வில் ஸ்மித்தின் மனைவியான நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித் குறித்து உருவக் கேலியாக பேசினார்.
ஆரம்பத்தில் சிரித்துக்கொண்டு கிறிஸ் ராக் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த நடிகர் வில் ஸ்மித், ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் மேடை ஏறி அவரை கன்னத்தில் பளார் என ஒருஅறை அறைந்தார். ஒரு சில நிமிடங்களில் இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. உலகம் முழுவதும் இது பேசுபொருளானது.இந்த விவகாரத்தில் நடிகர் வில் ஸ்மித்துக்கு ஆதரவு இருந்தாலும் பல்வேறு தரப்பில் எதிர்ப்பும் கிளம்பியது. அந்த வகையில், ஆஸ்கர் விருது விழாவை நடத்தி வரும் ‘Academy of Motion Picture Arts and Sciences’ என்ற அமைப்பு வில் ஸ்மித் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசித்தது. இதனையடுத்து 10 ஆண்டுகள் தடையை அகாடமி அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ள அகாடமி அமைப்பு, ஸ்மித் ஆஸ்கர் மேடையில் வெளிப்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை ஆகும். இந்த எதிர்ப்பாராத சம்பவத்துக்காக நாங்கள் வருந்துகிறோம். அந்த அசாதாரண சூழலிலும் அமைதி காத்த கிறிஸ் ராக்கிற்கு நன்றித் தெரிவித்து கொள்கிறோம்.ஸ்மித்துக்கு தடை என்னும் முடிவு கலைஞர்கள் மற்றும் விருந்தினர்களைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்தோடும், அகாடமியின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் நோக்கத்தோடும் எடுக்கப்பட்டுள்ளது” என்று அதில் விளக்கம் கொடுத்துள்ளது. முன்னதாக வில் ஸ்மித், தனது நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு கோரியதுடன் ‘Academy of Motion Picture Arts and Sciences’ என்ற அகாடமி அமைப்பின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார், என்பது குறிப்பிடத்தக்கது.