முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், கவாய் அமர்வு பேரறிவாளன் வழக்கை விசாரித்து வருகிறது.
பேரறிவாளன் மனு மீது ஆளுநர் முடிவெடுப்பார் என்று ஒன்றிட அரசு வழக்கறிஞர் கே.எம். நடராஜ் தெரிவித்தார். பேரறிவாளன் வழக்கில் தமிழ்நாடு ஆளுநருக்காக ஒன்றிய அரசு வாதிடுவது ஏன்? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஆளுநருக்காக மாநில அரசு வாதிட வேண்டுமே தவிர, ஒன்றிய அரசு வாதிடக் கூடாது என நீதிமன்றம் தெரிவித்தது.
மாநில அரசின் முடிவு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக இருக்கும் போது, ஆளுநர் குடியரசு தலைவரிடம் முறையிடலாம் என வழக்கறிஞர் கே.எம். நடராஜ் வாதிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம்; எந்த விதியின் கீழ் குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பினார்? ஆளுநருக்கு அதிகாரம் இருந்தும் 3 ஆண்டுகளாக ஏன் முடிவெடுக்கவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
பேரறிவாளனை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை; ஒன்றிய அரசுக்கே அதிகாரம் உள்ளது என வழக்கறிஞர் கே.எம். நடராஜ் வாதிட்டார். கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவரை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று கூற முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
கருணை மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது என வழக்கறிஞர் கே.எம். நடராஜ் தெரிவித்தார். பேரறிவாளன் விவகாரத்தில் கருணை மனு மீது ஒன்றிய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக ஒன்றிய அரசு தலையிட்ட பின்னரே குழப்பம் தொடங்கியது என தமிழக அரசு சார்ப்பில் வாதிடப்பட்டது. பொதுவான சட்டப்பிரிவாக இருந்தாலும் எந்த விசாரணை அமைப்பு சம்மந்தப்பட்டுள்ளது என்தே பொறுத்தே அதிகாரம். தமிழக அரசு தலையிட அதிகாரம் இருக்கிறதா என்பது பிரதான கேள்வியாக இருப்பதாக மத்திய அரசு வாதிட்டது. பேரறிவாளன் விவகாரத்தில் ஒன்றிய அரசின் கருத்து மட்டுமே தேவை; ஒப்புதல் தேவையில்லை என தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவிற்கு முழுமையாக கட்டுப்பட்டவர் என்று தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அமைச்சரவை முடிவை அனுப்பும் போது ஆளுநர் அதன் மீது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை செலுத்த முடியாது எனவும் வாதிட்டது.
நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு ஒன்றிய அரசு தெளிவாக பதிலளிக்கவில்லை என தெரிவித்த நீதிபதிகள்; கொலை வழக்கில் ஒன்றிய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதா? உச்சநீதிமன்றத்தின் கேள்விகளும் ஒன்றிய அரசின் வாதங்களும் வேறுவேறாக உள்ளது என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
ஐபிசியின் கீழ் விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பான கருணை மனுக்கள் மீது ஜனாதிபதிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்தது. அப்படியானால் 70 ஆண்டுகளாக ஆளுநர் அளித்த தண்டனை குறைப்பு, அரசியல் சட்டத்துக்கு எதிரானதா? ஆயிரக்கணக்கான உத்தரவுகளை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும் என ஒன்றிய அரசு எண்ணுகிறதா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
பேரறிவாளனை விடுவிக்கக் கோரிய வழக்கில் ஆளுநரின் முடிவு தொடர்பான ஆவணத்தின் நகலை ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. கடந்த முறை 2 முடிவுகளை தேர்வு செய்ய கூறினோம், ஏதேனும் முடிவு செய்யப்பட்டதா? எனவும் கேள்வி எழுப்பிய நீதிமன்றம் அமைச்சரவையின் முடிவுகளை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதற்கு கட்டுப்பட்டவர் தான் ஆளுநர். அமைச்சரவையின் முடிவுகள் தவறு என்றால் அதை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க முடியுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
அமைச்சரவையின் அறிவுரை, ஆலோசனையின் படி ஆளுநர் நடந்துகொள்ள வேண்டும் என சட்டம் கூறுகிறது என ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார். இருப்பினும், சில நேரங்களில், சில சந்தர்ப்பங்களில் ஆளுநர் சுயமாகவும் செயல்பட முடியும் எனவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டிருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என தமிழக அரசு வாதிட்டது. இந்த விவகாரத்தில் குடியரசு தலைவரை தலையிட வைத்து கூட்டாட்சி அமைப்பை கேள்விக்குள்ளாக்குவதா? இந்திய தண்டனை சட்டம் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டது இல்லை. அவற்றில் சில மாற்றங்களை மட்டுமே நாடாளுமன்றம் மேற்கொண்டுள்ளது. இந்திய தண்டனை சட்டத்தில் ஒன்றிய அரசு சில திருத்தங்களை மேற்கொண்டதாலேயே மாநிலங்கள் மீது ஒன்றிய அரசு அதிகாரம் செலுத்த முடியாது எனவும் வாதிட்டது.
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையின் முடிவை ஏற்காமல் மிகப்பெரிய அரசியல் பிழையை ஆளுநர் செய்து விட்டார் என தமிழக அரசு வாதம் முவைத்தது. முடிவெடுக்கும் முன்னுரிலை ஒன்றிய அரசுக்கே எனில் ஒவொரு கொலை வழக்கிலும் கருணை காட்டும் அதிகாரம் ஜனாதிபதிக்கு சென்று விடுமே? மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் தானே? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.