போராட்டம் அறிவித்த எம்.பி.
இந்தியாவில் மற்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் லாபத்தை அதிகரித்து, கட்டணத்தையும் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில்…. அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் வெறுப்பாகிக் கொண்டே இருக்கிறார்கள்,
சாதாரண மக்களின் இந்த குமுறலை திண்டுக்கல் மார்க்சிஸ்ட் எம்.பி.யான சச்சிதானந்தமே வெளிப்படுத்தியுள்ளார்.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் வெள்ளி விழாக் கொண்டாட்டம் நடைபெறும் நிலையில் திண்டுக்கல்லில் இதுகுறித்து பேசிய எம்ன்பி சச்சிதானந்தம்,
‘ஒடிசாவில் நடைபெற்ற விழாவில் பிரதமர் பங்கேற்று நாடு முழுவதும் 92 ஆயிரம் புதிய டவர்கள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். பி.எஸ்.என்.எல். துறையை பாதுகாப்பது நமது கடமை. இயற்கை பேரிடர்கள் நடந்த போது பிற தனியார் நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்பட்ட போதும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சேவை தான் நாட்டு மக்களுக்கு பேருதவியாக இருந்தது.
பி.எஸ்.என்.எல். பொது மேலாளரைக் கொண்டு திண்டுக்கல்லிள் ஏப்ரல் மாதம் ஆய்வுக் கூட்டம் நடத்தினேன். 6 மாதங்கள் கழிந்தும் கூட அந்த கூட்டத்தில் டவர் பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சனைகள் இப்போது வரை தீர்க்கப்படவில்லை.
2012ம் ஆண்டு 4ஜி சேவை ஏர்டெல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 2019;ல் தான் இந்த 4ஜி. சேவை கொடுக்கப்பட்டது. இந்த காலதாமதத்தினால் 4ஜி சேவை வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு மக்கள் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
இன்றைக்கு 5ஜி சேவையை ஜியோ போன்ற நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 5ஜி சேவை கிடைக்கவில்லைது. பி.எஸ்.என்.எல். திட்டமிட்டே பின்னோக்கி இழுக்கப்படுகிறது.
பி.எஸ்.என்எல். ஊழியர்களை விருப்ப ஓய்வில் செல்லலாம் என்று அறிவித்ததையடுத்து லட்சக்கணக்கான ஊழியர்கள் வெளியேறினார்கள். இதனால் பெரும் ஊழியர் பற்றாக்குறை நிலவுகிறது. பி.எஸ்.என்.எல் குறைகளை போக்க, தனியார் துறைக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல். அதிகாரிகளோ,மக்களோ குறைகள் சொன்னால் அதை நிவர்த்தி செய்யும் நிலையில் அந்த ஒப்பந்த நிறுவனங்கள் இல்லை.
திண்டுக்கல் மாவட்டத்தில் 424 டவர்கள் உள்ளன. வேறு எந்த தனியார் நிறுவனங்களுக்கும் இத்தனை டவர்கள் இல்லை. இன்னும் 25 டவர்கள் நிறுவுவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதை நிறுவும் பணி தாமதமாகி உள்ளது.
இதில் 4ஜி டவர் 212 நகர்ப்பகுதியில் உள்ளன. இதே போல் மலைப்பகுதிகளிலும், மாவட்டத்தின் கடைகோடிப்பகுதிகளில் போடப்பட்டுள்ள டவர்கள் எல்லாம் செயல்படாத நிலையே நீடிக்கிறது. இந்த பகுதிகளில் 4ஜி டவர்கள் போடப்பட்ட பகுதிகளில் 2ஜி செல்களுக்கு டவர் கிடைக்கவில்லை. மலைவாழ் மக்கள் எல்லாம் சாதாரண 2ஜி செல்போன் வைத்துள்ளார்கள். அதை பயன்படுத்த இயலாத நிலை உள்ளது . டவர்கள் நிறுவும் பணியில் டாடா டெண்டர் எடுத்துள்ளது. பிஎஸ்.என்.எல்.லுக்கு டவர்கள் ஒதுக்குவதே இல்லை.
கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தின் போது மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவிடம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செல்போன் டவர் பிரச்சனைகள் தொடர்பாக பேசினேன். எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்தவுடன், அதை படித்த பிறகு இந்த பிரச்சனை குறித்து அப்கிரேடு செய்வதாக சொன்னார். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சிறுமலையில் பி.எஸ்.என்.எல். சேவையில்லை. இப்போது தான் புதிதாக 2 இடத்தில் டவர் அமைக்க இடம் பார்க்கப்பட்டுள்ளது. நத்தம் தாலுகாவில் பிள்ளையார் நத்தம் கிராமம், சிரங்காட்டுப்பட்டி, ஊராளிபட்டி, மலையூர், கணவாய்ப்பட்டி, எஸ்.கொடை, மற்றும் குஜிலியம்பாறை பகுதியில் குஜிலியம்பாறை, டி.கூடலூர் கொடைக்கானல் பகுதியில் கீழ்மலையில் கோமாளிபட்டியிலிருந்து கே.சி.பட்டி, குப்பம்மாள்பட்டி, சிறுவாட்டுக்காடு, கவியக்காடு, பெத்தேல்புரம், ஒட்டன்சத்திரம் பகுதியில் கொத்தயம், பழனி பகுதியில் பொந்துப்புளி பகுதி போன்ற பகுதிகளில் பி.எஸ்.என்.எல். டவர் கிடைப்பதில்லை. கே.சி.பட்டி பகுதியில் ஜியோ டவர் மட்டும் கிடைக்கிறது.
இது செல்போன் டவர் பிரச்சனையாக மட்டும் பார்க்கக் கூடாது. அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த முடியவில்லை. ரேசன் கடையில் பொருள் வாங்குவது என்றால் கூட நெட் ஒர்க் கிடைக்காததால் பொருள் கொடுக்க முடியவில்லை. எனவே ரேசன் கடை சேல்ஸ்மேன் நெட் ஒர்க் கிடைக்கிற இடத்திற்கு வரச்சொல்லி அங்கு வந்து ரேகை வைத்துச் செல்ல சொல்கிறார்.
ஆசிரியர்கள் வருகை பதிவு செய்ய முடியவில்லை. மாணவர்கள் படிப்பதற்கு நெட் ஒர்க் கிடைப்பதில்லை. ஆரம்ப சுகாதார நிலைய சேவைகளிலும் இந்த பிரச்சனை உள்ளது. மேலும் டெலிபோன் அட்வைசரி கமிட்டியைக் கூட்ட வேண்டும் என்று ஆட்சி அமைந்த காலம் முதல் சொல்கிறோம். இதுவரை கூட்டப்படவில்லை., மேலும் பி.எஸ்.என்.எல். பொறியாளர்களுக்கு போதிய பயிற்சி அளிப்பதில்லை.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. எக்சேஞ்சுகள் செயல்படாத நிலை உள்ளது. அந்த இடங்களை விற்பனை செய்யப்படுகின்றன. திண்டுக்கல்லில் உள்ள எக்சேஞ்சில் கூட பிரியாணி கடை வந்துவிட்டது. எனவே பொதுத்துறை நிறுவனச் சொத்துக்களை விற்பனை செய்யக்கூடாது.
பிரதமர் அறிவித்துள்ள 92 ஆயிரம் டவரில் தமிழ்நாட்டுக்கு எவ்வளவு, மதுரை டிவிசனுக்கு என்ற விவரம் இல்லை. பல விஷயங்களில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவது போல பி.எஸ்.என்.எல். டவர் ஒதுக்கீடு செய்வதிலும் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது
ஒன்றிய அரசு டெலிபோன் அட்வைசரி கமிட்டியை கூட்ட வேண்டும். இந்த டவர் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கவில்லை என்று சொன்னால் நான் பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகம் முன்பாக காத்திருப்புப் போராட்டம் நடத்துவேன்” என ஆவேசமாக கூறினார் எம்பி. .
இது குறித்து பிஎஸ்என்எல் மதுரை மண்டல பொது மேலாளர் லோகநாதனிடம் அரசியல் டுடே சார்பாக கேட்டோம்.
“ திண்டுக்கல் எம்.பி சச்சிதானந்தம் பல இடங்களில் டவர் கிடைக்கவில்லை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுட்டிக்காட்டிருந்தார். எம்.பி. குற்றச்சாட்டுகள் அனைத்தும் சரி செய்யப்படும். குக்கிராமங்கள் மலை கிராமங்கள் அனைத்திலும் டவர் கிடைப்பதற்கு வசதிகள் செய்யப்படும். புதிய டவர்கள் நிறுவுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பல விஷயங்கள் நான் வெளியே சொல்ல முடியாது. அனைத்தையும் எங்கள் உயர் அதிகாரிகளுக்கு எழுதி அனுப்பி உள்ளோம். எம். பி. போராட்டம் நடத்த அவசியமில்லாமல் அதற்குள் சரி செய்வோம்” என்றார்.
