• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

திருச்செந்தூர் கோயில் சீர்கேடுகள்…

கொந்தளிக்கும் பக்தர்கள்…

பதில் சொன்ன அமைச்சர் சேகர்பாபு

திருச்சீரலைவாய் என சான்றோர்களால் அழைக்கப்படும் திருமுருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அமைந்துள்ளது.  

தேடி வருவோர்க்கெல்லாம்  தெய்வாம்சம் தரும் திருத்தலமான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் தரிசன நடைமுறையில் பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் அரங்கேறி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் முக்கிய திருக்கோவில்களில் ஒன்றாக பார்க்கப்படக்கூடிய திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவின் பிறமாநிலங்களில் இருந்தும் அயலக நாடுகளில் இருந்தும் தினசரி பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். இத்தகைய பெருமைக்குரிய திருக்கோவிலானது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் நிலையில் இத்திருக்கோவிலில் சுகாதார சீர்கேடுகள், தரிசன நடைமுறையில் பல்வேறு குளறுபடிகள், கைகலப்பு, பக்தர்கள் போராட்டம், தரிசன விதிமீறல்கள் என பலதரப்பட்ட நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

இது தொடர்பாக திருச்செந்தூரை சேர்ந்த சமூக ஆர்வலர் திருவழகப்பாண்டியன் நமது அரசியல் டுடேவிடம் பேசினார்.

”திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் அதிகளவில் வழிபட வரத்தொடங்கியுள்ளனர். இந்த கூட்டத்தை பயன்படுத்தி பலரும் வருமானம் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

சமீபத்தில் அறநிலையத்துறை அலுவலருக்கும் காவல்துறை அலுவலருக்கும் கைகலப்பு நடந்த செய்திகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. அதிக பணம் வாங்கி கொண்டு குறுக்கு வழியில் மக்களை கொண்டு செல்வது தான் இவர்கள் நோக்கம். காவல்துறைக்கு தெரியாமல் அறிநிலையத்துறையோ , அறநிலையத்துறைக்கு தெரியாமல் காவல்துறையோ பக்தர்களை உள்ளே கொண்டு செல்ல இயலாது. இந்த பணம் யாருக்கு செல்கிறது என்பது அந்த முருகனுக்கு தான் வெளிச்சம்.

ஒரு நேரத்தில் உள்ளூர் மக்கள் இலவசமாக முருகனை வழிபட்டு வந்தனர். தற்போது அதற்கும் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தி விட்டனர், மேலும் சண்முக விலாசத்தில் இருந்து வழிபடுவதும் தற்போது தடைப்பட்டுள்ளது. வீதியில் நின்று திருமணம் நடைபெறும் அவலநிலை, வேளாண்மை செய்த பொருட்களை சண்முக விலாச மண்டபத்தில் வைத்து வழிபட்டு கோவிலுக்கு பங்கு கொடுத்து வந்தது, தற்போது அதுவும் நடைபெறவில்லை.

பிரசாதம் என்ற பெயரில் படங்களை முறைகேடாக விற்று பணம் பறிப்பதும் தொடர்கதையாகவும் அர்ச்சனை சீட்டு இல்லாமல் எங்கோ ஓரிடத்தில் தேங்காய் உடைத்து பணம் சம்பாதிக்கிறார்கள்.

போதுமான கழிவறை கிடையாது

இருக்கும் கழிவறைகளில் சுத்தம் செய்வதில்லை. இதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர் மீது வழக்கு பதிந்து தற்போது சிறையில் இருக்கிறார்.

தற்போது பிரேக் தரிசனம் என்ற பெயரில் 500 ரூபாய் பணத்தை அரசாங்கம் வாங்கிக்கொண்டு பணம் படைத்தவர்களை சட்ட ரீதியாக உள்ளே அனுப்புகிறது. இதற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு கடிதம் கொடுத்தும் இந்த அரசு அதை கண்டுக் கொள்ளவே இல்லை.  பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே கடவுள் தரிசனமா?

திருக்குட நன்னீராட்டு தமிழிலும் நடைபெறும் என்று அறிவிப்பு மட்டும் தான். கோபுரத்தில் சமஸ்கிருதம் தான் ஒலித்தது,  கருவறையில் மலையாள நம்பூதிரிகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது

இதற்கு காரணமான அறநிலையத்துறை இணை ஆணைய நிர்வாகம் மற்றும் வேண்டும்

காவல்துறை நிர்வாகம் சீராக்கப்படுவதோடு

உள்துறை அலுவலர்கள் அனைவரும் மாற்றப்பட வேண்டும்,

வழிபாட்டை அனைவருக்கும் சமமானதாக மாற்றி சண்முக விலாச மண்டபத்தை பொதுமக்கள் வழிபட திறந்து விட வேண்டும் என்பதே அனைத்து தரப்பு பொதுமக்களின்  கோரிக்கை” என்றார்.

பிஜேபி முன்னாள் வர்த்தக அணி  மாவட்ட தலைவர் ராஜ் கண்ணன்  நம்மிடம்,

“திருச்செந்தூர் கோவில் மிகவும் சீர்கெட்டு உள்ளது.  பக்தர்கள் தரிசனம் செய்ய 3 மணிநேரம் முதல் 5 நேரம் வரை காத்திருக்க வேண்டும். இந்த நிலையில்  பணம் கொடுத்தால் உடனடியாக தரிசனம்.   அமலிநகர் தூண்டில் வளைவின் தாக்கம்தான் தற்போது திருச்செந்தூர் கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்படுகிறது.

 திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சொத்துக்கள் ஏராளமாக உள்ளன.  தற்போது. மெஞ்ஞானபுரம் அருகே கோவிலுக்கு  சொந்தமான இடத்தில் தற்போது கிறிஸ்தவ சமுதாய மக்கள்  வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர்.

நான் பலமுறை அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை புகார்கள் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

  திருச்செந்தூர் திருப்பதிக்கு அடுத்த இடம் என சொல்லும் அதிகாரிகள்   இதுவரை என்ன செய்தார்கள்?  தற்போது பெண்கள் மற்றும் ஆண்கள் பொது இடத்தில் கழிவறை போகும் நிலைமை உள்ளது”  என்றார்.

கோயில் வளாகத்தில் நம்மிடம் பேசிய சில பக்தர்கள்,  “தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும கோவில்களில் தினமும் ஒரு மணி நேரம் இடைநிறுத்தம் தரிசனமுறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன் முதற்கட்டமாக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில், அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளிட்ட கோவில்களில் இத்தகைய இடைநிறுத்த தரிசன நடைமுறை ஏற்படுத்துவதாக அறிவிப்பு செய்யப்பட்டது.

இதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இத்தகைய சூழலில் திருமுருகனை தரிக்க வரும் அனைத்து தரப்பு மக்களுக்கும் நிறைவான வழிபாட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது” என்றனர்.

நாம் இதுகுறித்து.  அமைச்சர் சேகர் பாபுவிடம்  அலைபேசியில் தொடர்புகொண்டு நமது அரசியல் டுடேவிடம் கூறப்பட்ட புகார்களை  அவரது கவனத்துக்கு எடுத்துச் சென்றோம்.

”திருச்செந்தூர் முருகன் கோயிலில் எழும்  பிரச்சினைகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளேன் சில பிரச்சினைகளில் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  அனைத்தும் விரைவில் சரிசெய்யபடும்” என்று கூறினார் அமைச்சர் சேகர்பாபு.