• Fri. Apr 19th, 2024

அ.தி.மு.க.வின் அடுத்த எதிர்க்கட்சித் துணைத்தலைவர் யார்..?

Byவிஷா

Oct 12, 2022

தமிழக சட்டமன்ற கூட்டம் தொடங்கவுள்ள நிலையில், எதிர்கட்சி துணை தலைவராக ஓ. பன்னீர் செல்வத்தை சபாநாயகர் அங்கீகரிக்க போகிறாரா..? அல்லது ஆர்.பி.உதயகுமாருக்கு அதிகாரம் வழங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளதையடுத்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எதிர்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு விட்டதாகவும், புதிய எதிர்கட்சி தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஓ. பன்னீர்செல்வமும் கடிதம் ஒன்றை சபாநாயகருக்கு அனுப்பியிருந்தார். அதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான் தான் என்றும் எதிர்கட்சி துணை தலைவர் பதவியை யாருக்கும் மாற்றவில்லையென தெரிவித்திருந்தார்.
இந்த குழப்பத்திற்கு மத்தியில் வருகிற 17 ஆம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டம் தொடங்கப்படவுள்ளது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ்க்கு எந்த இடத்தில் இருக்கை ஒதுக்கப்படவுள்ளது என்ற கேள்வியானது எழுந்துள்ளது. ஏற்கனவே சட்டமன்றத்தில் எதிர்கட்சி வரிசையில் எடப்பாடிக்கு அடுத்தபடியாக ஓ பன்னீர் செல்வத்திற்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதால் எந்த இடத்தில் ஓ பன்னீர்செல்வத்திற்கு இருக்கை ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த சபாநாயகர் அப்பாவு இரு தரப்பும் கடிதம் கொடுத்துள்ளனர். இரண்டு பேரும் முன்னாள் முதல்வர்கள் எனவே அவையில் கண்ணியமாக நடந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு சபாநாயகருக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளனர். அதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் கலந்து ஆலோசிக்கவேண்டும் என ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்ற அடிப்படையில் அலுவல் ஆய்வுக்குழுவில் ஆர்.பி.உதயகுமாரை அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இரண்டு தரப்பு போட்டி காரணமாக சபாநாயகர் அப்பாவு என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சபாநாயகர் முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *