• Fri. Mar 29th, 2024

பாண்டியர் பெருமை பேசும் யாத்திசை படத்தில் இடம் பெறும் ரணதீர பாண்டியன் யார்?

பெரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கப்படும் ரணதீர பாண்டியனுக்கும் எயினர்களுக்கும் நடக்கும் போரை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் யாத்திசை.
வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் சார்பில் கே.ஜெ.கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தை தரணி ராசேந்திரன் இயக்கியுள்ளார். சக்ரவர்த்தி இசை அமைத்துள்ளார். மேடைகளில் சித்தாந்த அரசியல் பேசும் இயக்குநர்கள் வணிகம், கதாநாயக பிம்பத்தை கட்டமைப்பதற்காக யதார்த்தத்திற்கு புறம்பாக படங்களை இயக்கி வரும் சூழலில் சமரசமில்லாமல் இயக்கியிருக்கும் திரைப்படம் யாத்திசை இன்று
தமிழகம் முழுவதும் 124 திரைகளில் படம் வெளியாகிறது
இந்தப் படத்தின் ட்ரெய்லர் இரு வாரங்களுக்கு முன் வெளியான நிலையில், அதனை ஆறு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர்.

இந்தப் படத்தின் கதைதான் என்ன:

ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த ரணதீர பாண்டியனின் காலம். சேரர், சோழர் என அனைவரையும் வென்று பெரும் நிலப்பரப்பு அவன் வசம் இருக்கிறது. இந்த நிலையில், சுதந்திரமாக வாழ விரும்பும் எயினர் என்ற சிறு குடியினர், ரணதீர பாண்டியன் பிடித்துவைத்துள்ள சோழர் கோட்டை ஒன்றை மீட்க முயல்கின்றனர். அது நடக்கிறதா என்பதுதான் கதை.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள போர்க்கள காட்சிகளும் அந்த காலகட்டத்திற்கே உரிய ஆடை வடிவமைப்பும் மிக உக்கிரமான சண்டைகளும் இந்தப் படம்
மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தியிருக்கின்றன. இந்தப் படத்தைப் பற்றி மட்டுமல்லாமல், படத்தில் வரும் ரணதீர பாண்டியனைப் பற்றிய ஆர்வமும் அதிகரித்திருக்கிறது.
ரணதீர பாண்டியன் யார், அவனைப் பற்றி எப்படித் தெரிந்தது?
பாண்டிய நாட்டை ஆண்ட ரணதீரனைப் பற்றி மட்டுமல்ல, பல்வேறு பாண்டிய மன்னர்களைப் பற்றியும் அதற்கு முன்பு ஆட்சி செய்த களப்பிரர்களைப் பற்றியும் விரிவாகத் தெரியவர காரணமாக அமைந்தது ஒரு செப்பேட்டுத் தொகுதி.இந்தச் செப்பேட்டுத் தொகுதி மதுரை அருகே உள்ள மாடக்குளம் கிராமத்தில் இருந்துகிடைத்தது. மொத்தம் பத்து செப்பேடுகள் இந்தத் தொகுதியில் இருந்தன. இவை ஒரு வளையத்தால் இணைக்கப்பட்டிருந்தன.


வேள்விக்குடி என்ற ஊரில் அறிவிக்கப்பட்ட தானம் குறித்து இந்தச் செப்பேட்டில் இடம்பெற்றிருந்ததால், இந்தச் செப்பேட்டுத் தொகுதி வேள்விக்குடி செப்பேடு என அழைக்கப்படுகிறது. இந்தச் செப்பேட்டின் காலம் கி.பி. 769 அல்லது கி.பி. 770ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த செப்பேடுகள் கிரந்த எழுத்தில் சமஸ்கிருத மொழியிலும் வட்டெழுத்தில் தமிழிலும் எழுதப்பட்டிருந்தன. இந்த செப்பேட்டில்தான் பல பாண்டிய மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்தச் செப்பேட்டை வெளியிட்ட மன்னன் நெடுஞ்சடையன் பராந்தகன்.


சங்க காலத்து பாண்டிய மன்னனான முதுகுடுமிப் பெருவழுதி என்பவன் கொற்கைக் கிழான் நற்கொற்றன் என்பவருக்கு, வேள்விக்குடி என்ற கிராமத்தை வரியில்லா கிராமமாக வழங்கினான். பிற்காலத்தில் களப்பிரர் ஆட்சியின்போது அந்த வேள்விக்குடி கிராமம் கைப்பற்றப்பட்டதாகவும் அதனைக் கேள்விப்பட்ட நெடுஞ்சடையன் பராந்தகன், கொற்கைக் கிழான் வழிவந்த நரசிங்கன் என்பவனுக்கு மீண்டும் அந்த கிராமத்தை வழங்குவதற்காக வெளியிட்ட செப்பேடுதான் இந்த வேள்விக்குடி செப்பேடு.சங்க கால மன்னர்கள் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு இது எழுதப்பட்டது. ஆகவே, நெடுஞ்சடையன் பராந்தகன் தான் வழிவழியாக கேட்டறிந்ததையே இந்தச் செப்பேட்டில் பதிவுசெய்துள்ளதாகக் கருதப்படுகிறது. களப்பிரர் ஆட்சியை கடுங்கோன் என்பவன் அகற்றியது, கோச்சடையான் ரணதீரன் பெற்ற வெற்றிகள் ஆகியவை இந்தச் செப்பேட்டில் இருந்துதான் தெரியவந்தன.
இந்த வேள்விக்குடி செப்பேட்டில் ரணதீரனின் பெயர் ‘ரணதீரன்’ என்று சமஸ்கிருதத்திலும் ‘கோசடையான்’ என தமிழிலும் குறிப்பிடப்படுகிறது. அரிகேசரி மாறவர்மனின் மகன்தான் இந்த ரணதீரன். ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் இவன் ஆட்சிக்கு வந்திருக்கக்கூடும் என கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.
இந்த ரணதீரனுக்கு ‘வானவன்’, ‘செம்பியன்’, “சோழன்” போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன. சேர, சோழர்களை வென்றதன் அடையாளமாகவே இந்தப் பட்டங்கள் வழங்கப்பட்டிருக்கக்கூடும்.
மதுர கர்நாடகன், கொங்கர்கோமான் ஆகிய பட்டங்களும் இவனுக்கு வழங்கப்பட்டிருந்தன. இவை வெற்றுப் பட்டங்கள் அல்ல; அவன் பெற்ற வெற்றிகளைக் குறிப்பவை என தனது The Pandya Kingdom நூலில் குறிப்பிடுகிறார் நீலகண்ட சாஸ்திரி.தற்போதைய மங்களூரில் நடந்த போரில் மராத்தாக்களையும் வென்றிருக்கிறான் ரணதீரன். நெடுவயல், குறுமடை, மாங்குறிச்சி, திருமங்கை, பூவலூர், கொடும்பாளூர் ஆகிய இடங்களில் நடந்த போரிலும் வெற்றிபெற்றிருக்கிறான்.
இவரது ஆட்சிக்காலம் கி.பி. 700 முதல் கி.பி. 730வரை இருந்திருக்கக்கூடும். இவருக்குப் பிறகு இவருடைய மகன் அரிகேசரி பராந்தகன் ஆட்சிக்கு வந்தார்.
யாத்திசை படத்தில், தென்திசையில் வாழக்கூடிய இனக்குழுவினராக எயினர்கள் காட்டப்படுகின்றனர். இவர்களே ஒருங்கிணைந்து பாண்டியன் வசமிருந்த கோட்டை ஒன்றை மீட்க முயல்கின்றனர்.
தமிழ் இலக்கியத்தில் வரும் ஐந்திணைகளில், எயினர்கள் என்பவர்கள் பாலை நிலத்தைச் சேர்ந்தவர்கள். கொற்றவையை வணங்கும் இவர்கள் போரில் ஈடுபடுவதில் ஆர்வம் உடையவர்கள். அகநானூறு, புறநானூறு, மதுரைக் காஞ்சி ஆகிய நூல்களில் எயினர் திரும்பத் திரும்பக் குறிப்பிடப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *