• Tue. Apr 23rd, 2024

இந்திய எல்லையில் நுழைந்த சீன ராணுவம்?

லடாக்கில் ஜனவரி 28ஆம் தேதி நுழைந்த சீன ராணுவத்தினர், அப்பகுதியில் எருது மேய்த்து கொண்டிருந்தவர்களை அப்பகுதியிலிருந்து விரட்டியடித்ததாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா- சீனா இடையே கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் மோதல் போக்கு இருந்து வருகிறது. அத்துமீறி சீன படையினர் இந்திய எல்லையில் நுழைவதும், அவர்களை இந்திய படையினர் விரட்டியடிப்பதும் நடைபெற்று வருகிறது. இரு தரப்பினரிடையே மோதல் போக்கை கைவிட ராணுவ அதிகாரிகள் தலைமையில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
எனினும் அதில் சுமூக உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை. அருணாச்சல பிரதேசத்தில் ஊடுருவிய சீன ராணுவத்தினர் அங்கு ஒரு கிராமத்தையே கட்டியுள்ளதாக சாட்டிலைட் புகைப்படங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் இந்திய எல்லையில் சீன ராணுவத்தினர் நுழைந்ததாக லடாக்கை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதுகுறித்து நியோமாவின் வட்டார வளர்ச்சி அலுவலர் உர்கைன் சோடான் கூறுகையில் கடந்த ஜனவரி 28ஆம் தேதி நமது பகுதிக்குள் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தனர்.
அவர்கள் அங்கு இருந்த மக்களையும் மேய்ப்பாளர்களையும் விரட்டியடித்தனர். அவர்கள் யாரையும் கடத்திச் செல்லவில்லை என கூறியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோவை வெள்ளிக்கிழமை அன்று அந்த பெண் அதிகாரி சோடான் ட்வீட்டரில் வெளியிட்டுள்ளார். அது 45 வினாடிகள் கொண்ட வீடியோவாகும்.

மேய்ச்சல் பகுதியான டோக்பக் பகுதியில் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்ததாக வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவுடன் சோடான் கூறுகையில், ஜனவரி 28 ஆம் தேதி நமது எல்லைக்குள் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தனர். அந்த நேரத்தில் நமது சொந்த மண்ணில் இருந்த மேய்ப்பாளர்களை அங்கு இருக்க விடாமல் விரட்டியடித்தனர்.

இதற்கு பாதுகாப்பு துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் நம் நாட்டை சேர்ந்த ஒரு மேய்ப்பாளர் எல்லை தாண்டி சென்ற தனது தனது வாழ்வாதாரமான காட்டு எருதுகளை மீட்க சென்ற போது ராணுவத்தினரிடம் பிடிபட்டு 2 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

நான் நியோமா காவல் நிலையத்திற்கு சென்று அந்த நபரை மீட்டேன் என்றார். இதுகுறித்து இந்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறுகையில் எல்லை தாண்டிய மேய்ப்பாளரை கைது செய்தது உண்மைதான். ஆனால் அவர் திரும்பி வரும் போது அவருடன் எந்த எருதுவும் இல்லை. உள்ளூர் மக்கள் சொல்வதும் அந்த நபர் சொல்வதும் முரண்பாடாக இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தோம் என பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

அது போல் நேற்றைய தினம் சோடான் போட்ட ட்வீட்டில் எல்லை பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டில் நமது அரசு எப்போதும் ஸ்திரமான நிலைப்பாட்டை கொண்டிருக்கும். எனவே சீன ராணுவத்தினர் நமது எல்லைக்குள் வந்தது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என்றார். சீன ராணுவத்தினர் இந்திய எல்லையில் அத்துமீறியதாக சோடான் கூறும் வீடியோ பழைய வீடியோ என பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது சோடான் சொன்ன பகுதியில் பனி படர்ந்து வரும் சூழலில் அவர் வெளியிட்ட வீடியோவில் வெயில் அடிக்கிறது. அதாவது அது கோடைக் காலம். எனவே இது பழைய வீடியோ என்றனர்.முன்னாள் பாஜக கவுன்சிலரான சோடான், நான் என்ன ட்வீட் செய்தேனோ அதுதான் நடந்தது என தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *