• Sat. Apr 20th, 2024

குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் எப்போ தருவீங்க பாஸ்

பெண்களுக்கு வழங்குவதாக சொன்ன ரூ 1000 எங்கே என பிரச்சாரத்தில் ஒருவர் கேட்டதற்கு பதில் கூறியுள்ளார், திமுக இளைஞரணி செயலாளரும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான, உதயநிதி ஸ்டாலின்.

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுடன் போட்டியிடுகிறது. அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.

வேட்புமனு தாக்கல் எல்லாம் முடிவடைந்த நிலையில் கட்சித் தலைவர்கள், மூத்த நிர்வாகிகள் தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளனர். அந்த வகையில் திமுக சார்பில் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் காணொலி வழியே பிரச்சாரம் செய்து வருகிறார்.

அவரது மகனும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின், கரூர் வேலாயுதம்பாளையத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில் திமுக ஆட்சிக்கு வந்த 8 மாதத்தில் 9 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு போட்டுள்ளோம். இதனால் கொரோனா 3ஆவது அலையை எந்த வித பிரச்சினையுமின்றி கடந்துவிட்டோம். ஒமிக்ரானையும் வென்றுவிட்டோம். இதற்கெல்லாம் காரணம் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிதான். தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் 50 சதவீதம் நிறைவேற்றிவிட்டோம். அந்த உரிமையில் உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளோம்.

பெண்களுக்கு இலவச பயணம் என அறிவித்தார், செய்தாரா இல்லையா, கொரோனா நிவாரணம் ரூ 4000 வழங்குவதாக கூறினார். அதையும் செய்துவிட்டார். ஆவின் பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு என சொல்லியதை எல்லாம் செய்து முடித்திருக்கிறோம். வடஇந்தியாவில் பத்திரிகைகளில் தமிழகத்தின் முதல்வர்தான் முதன்மையானவர் என சர்வேயில் கூறுகிறார்கள்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசிக் கொண்டே இருந்தார். அப்போது அங்கிருந்த ஒருவர் பெண்களுக்கு மாசம் ரூ 1000 தருவதாக சொன்னீங்களே அது என்னாச்சு என்றார். அப்போது உதயநிதி என்னதுங்க என்றார். அந்த நபர் மீண்டும் கூற, கொடுத்துடுலாம்.. இன்னும் 4 வருஷம் இருக்குல்ல என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *