17 ஆண்டுகளுக்குப் பிறகு, மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் செய்வதற்கான நாள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, 2026 ஜனவரி மாதம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் கடந்த 2020 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்திருக்க வேண்டும். ஆனால் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் தேதி மீனாட்சி அம்மன் கோவில் வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மண்டபம் முற்றிலும் சிதைந்தது. இந்த நிலையில் சீரமைப்பு பணிகளுக்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து தற்போது நிர்வாக காரணங்களால் பணிகள் தாமதமாக துவங்கி நடைபெற்று வருகிறது.
இதனால் வீரவசந்தராயர் மண்டபத்தை விடுத்து இதர திருப்பணிகளை மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்தக் கூடாது என்ற காரணத்தினால் 2021 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டசபையில் இரண்டு ஆண்டுகளுக்குள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார். இதன் பிறகு திருப்பணிகள் வேகம் எடுத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நான்கு கோபுர பணிகள் ஆன்மீக ஆர்வலர்களின் பங்களிப்புகளின் மூலம் நடந்து வரும் நிலையில், திருப்பணிகளுக்காக அரசு சார்பில் 25 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமல்லாமல் வீரவசந்தராயர் மண்டப பணிகளுக்காக நாமக்கல் ராசிபுரம் அருகே அமைந்துள்ள களரம்பள்ளி மலை அடிவாரத்தில் கற்கள் வெட்டி எடுப்பதற்காக ரூபாய் 6.40 கோடியும் மண்டபம் வடிவமைப்பிற்காக ரூபாய் 11.70 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த கற்கள் மதுரை புறநகர் பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்த இடமான செங்குளத்தில் செதுக்கப்பட்டு கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் அறிவித்தபடி கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்பதாலும் 2016 சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானால் பணிகள் தடைபடும் என்பதாலும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை நாள் குறித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்குள் திட்டமிட்டபடி திருப்பணிகளை விரைந்து முடிக்க கோவில் நிர்வாகத்திற்கு அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் எப்போது?
