• Wed. Jun 18th, 2025
[smartslider3 slider="7"]

சைக்கிள் பயணத்தை அதிகரிப்போம் – ஜூன் – 15 -உலக காற்று தினம்

ByA.Tamilselvan

Jun 15, 2022

புகையை வெளியிடும் மோட்டார் வாகனங்களை குறைப்போம்.சைக்கிள் பயணத்தை அதிகரிப்போம். உலக காற்று தினத்தில் உறுதியேற்போம்.
நமது வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் பயன்படும் உன்னதம் வாய்ந்த ஒன்று, காற்று. அத்தகைய காற்றிற்கு பெருமை சேர்க்கும் வகையில் உலக காற்று தினம் கொண்டாடப்படுகிறது.
காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக உலக காற்று தினம் ஜூன் 15 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையம் மற்றும் உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் இணைந்து உருவாக்கிய இந்நாள், காற்றின் ஆற்றலைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் காற்றின் முக்கியத்துவம் குறித்து நமக்கு உணர்த்துகிறது.
மனித நாகரீகம் வளர வளர இயற்கையானது சீர்கேடு அடைந்து வருகிறது. உலகில் உயிர்கள் வாழ இன்றியமையாதது காற்று. எனினும், சில நேரங்களில் இந்த காற்று தனி உருவெடுத்து தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. அதிதீவிர காற்று புயலாக மாறினால் ஆபத்து ஆதிக்கம் செய்யும் என்பதும் உண்மை.
சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை அமைச்சகம் சார்பில் 2014 இல் காற்று தரக் குறியீட்டு எண் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் தமது சுற்றுப்புறக் காற்றின் தரத்தினை எளிதில் அறியும் வண்ணம் ‘ஒரே எண் – ஒரே நிறம் – ஒரே விளக்கம்’ என வரையறுக்கப்பட்டது.
மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நாடு முழுவதும் 240 நகரங்களில் தேசியக் காற்று கண்காணிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. சென்னையில் காற்றுத் தரக் கண்காணிப்பு மையம் 24 மணிநேரமும் தொடர்ச்சியாக காற்றின் தரத்தைக் கண்காணித்து வருகின்றது. இதற்கான முழுவிவரங்களும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகின்றது.
10 ஆண்டுகளுக்கு முன்பே 2012 இல் உலகின் 132 நாடுகளில் மிகக் குறைந்த காற்றுத் தரம் கொண்ட நாடாக இந்தியா மதிப்பிடப்பட்டுள்ளது.
உலக அளவில் காற்று மாசுபட்டுள்ள நகரங்களில் புதுடெல்லி முதலிடத்தில் உள்ளது.
காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது தமிழ்நாடு. இதனைக் கருத்தில் கொண்டு வருடம் முழுவதும் மற்றவர்களுக்கு உபதேசிக்கும் அனைத்தையும், அவர் அவர் கடைபிடித்தால் மட்டுமே எதிர் வரும் சமுதாயம் நல்ல காற்றினை சுவாசிக்க முடியும் என்பதை நாம் மனதில் கொண்டு இனி வரும் நாட்களில் காற்றை மாசுபடுத்த மாட்டோம் என உறுதியேற்போம்.ஒவ்வொருவரும் தங்களது வாகனங்களை புகை இல்லாமல் நல்லபடியாக வைத்துக்கொள்ள வேண்டும். தொழிற்சாலைகளில் காற்று மாசைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மரங்களை அதிக அளவில் வளர்க்க வேண்டும்.முடிந்தால் சைக்கிள் பயணத்தை அதிகரிக்கவேண்டும்.
நல்ல காற்றை நாம் மட்டும் சுவாசித்தால் போதாது, நமது அடுத்தத் தலைமுறைக்கும் விட்டுச்செல்ல ஒவ்வொரு தனிமனிதனும் உறுதி கொள்ள வேண்டும்.