இந்திய அரசியலமைப்பு மீதான தாக்குதலை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என பிரதமர் மோடி உரையாற்றினார்.
இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். நாடாளுமன்றத்தை வணங்கும் தினம் இன்று என கூறினார். அரசியல் சாசன தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியதாவது; பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நமது அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டது. பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டை இந்திய அரசியலமைப்பே ஒன்றுபடுத்துகிறது. நமது அரசியலமைப்பு என்பது பல்வேறு சட்ட விதிகளின தொகுப்பு மட்டுமல்ல பெரும் பாரம்பரியம். எதிர்கால தலைமுறையினர் நமது அரசியலமைப்பு பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அம்பேத்கரை ஏற்க மறுப்பவர்கள் தேசத்திற்கு எதிரானவர்கள்.
அம்பேத்கரின் பெயரை நாம் காப்பாற்ற வேண்டும். அம்பேத்கர் நாட்டிற்கு ஆற்றிய சேவை எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை அரசியல் சாசனம் நிரூபித்துள்ளது.
அம்பேத்கரின் சேவையை சிலர் வெளிப்படையாக பாராட்டத் தயங்குவது வேதனை அளிக்கிறது. நாட்டிற்காக தீவிரவாதிகளை எதிர்த்து போரிட்டவர்களை இங்கே நினைவு கூறுகிறேன். இன்று மும்பை தாக்குதல் நடைபெற்ற நாள் என்பதையும் நாம் மறக்க கூடாது. தீவிரவாத தாக்குதலில் உயிர் நீத்த எல்லோரையும் நான் வணங்குகிறேன். நமது உரிமைகளை பாதுகாக்க கடமை என்கிற பாதையில் முன்னேறிச் செல்ல வேண்டியது அவசியம். அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறவேண்டும்.