• Wed. Apr 24th, 2024

ஆலயம் அறிவோம் :வாராக் கடனை வசூலித்து அளிப்பார் புறவேலிநாதர்

நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ளது கீழக்கல்லூர். ஒருகாலத்தில் சபேசபுரம் என அழைக்கப்பட்டது. பல்லாண்டுகட்கு முன்பிருந்தே இங்கு சிவன் கோயில் அமைந்திருக்கிறது. இறைவன் சிதம்பரேஸ்வரர் என்றும், அம்பாள், சிதம்பரேஸ்வரி என்றும் பெயர் பெற்று விளங்கியிருந்தனர்.

ஒருசமயம் மிகப்பெரிய இயற்கை சீற்றம் ஏற்பட்டது. இங்கிருந்த சிவபெருமான் மணலில் புதைந்து விட்டார். காலங்கள் கடந்தன. பக்தர்களுக்கு அருள்புரிய தானே வெளியே வர திருவருள் புரிந்தார் சிவபெருமான். தாமிரபரணி கரையில் செழிப்பாய் விளங்கிய இவ்விடத்தில் கூட்டம் கூட்டமாக பசுக்கள் மேய்ந்து வந்தன. பசு ஒன்று மட்டும் குறிப்பிட்ட நேரங்களில் லிங்கம் மீது தினமும் பால் சுரந்து வந்தது.

அதைக்கண்டு ஆச்சரியமும், கோபமும் அடைந்தான், மேய்ப்பன்.
குறிப்பிட்ட நேரத்தில் காணாமல்போய் பாலைச் சுரந்து வரும் அந்தப் பசுவின் மீது கோபத்துடன் கல்லை எறிந்தான். பதறிய பசு, லிங்கத்தினை மிதித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. அப்போது அதன் கால் குளம்புபட்டு லிங்கத்தின் மீதிருந்து ரத்தம் கசிந்தது. இதைக்கண்ட அவன் மிரண்டான். ஊரில் சென்று மக்களிடம் கூறினான். மக்கள் அந்தப் பகுதியை ஆண்ட அரசனிடம் தெரிவித்தனர். உடனே அரசன் படை, பரிவாரங்களுடன் அங்கே வந்தார். அங்கே சுயம்புலிங்க வடிவில் சிவபெருமான் காட்சியளித்தார். பசுவின் கால்தடம் பட்ட இடத்தில் ரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது. அந்த லிங்கத்தினை வணங்கி நின்றனர். பின் அவருக்கு தேனுபுரீஸ்வரர், சிதம்பரேஸ்வரர் போன்ற திருநாமங்களைச் சூட்டி வழிபாடுகளை நடத்தினர். இங்குள்ள மூலவரான சிவலிங்கத்தின் மீது பசுவின் கால் தடம் உள்ளதை காணலாம்.

ராஜராஜசோழன் இந்த பிரம்மதேசத்தினை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். இந்த பகுதியிலுள்ள பல கோயில்களுக்குத் திருப்பணி செய்திருக்கிறான். தாமிரபரணி நதிக்கு ‘ராஜராஜசோழப் பேராறு’ என்று தன் பெயரைச் சூட்டி பெருமை அடைந்தான். அந்தச் சமயத்தில் இப்பகுதி விவசாயிகள் கோடகன் சம்பா என்ற உயர் ரக நெல்லை பயிர் செய்தனர். பட்டன் கல்லூர், கோடக நல்லூர், மேலக் கல்லூர், கீழக்கல்லூர் போன்ற பிரம்மதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த நெல்லைப் பயிர்செய்தனர். இந்த ரக அரிசியினால் செய்யப்பட்ட உணவு ருசியாகவும், சில நாட்கள் கெட்டு போகாமலும் இருந்தது. இதனையறிந்த மன்னன், கோடகன் சம்பா நெல்லிற்கு ‘ராஜ அன்னம்’ என பெயரிட்டார். அந்த உயர் வகை நெல் திருச்செந்தூர், சங்கரன்கோவில், பாபநாசம், பிரம்மதேசம், திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி போன்ற தலங்களில் குடிகொண்டிருக்கும், தெய்வங்களுக்கு நிவேதனமாகப் பயன்பட ஏற்பாடு செய்தார்.

இறைவன் முன்பு மனசாட்சிப்படி விவசாயிகள் வரி செலுத்தும்படி வகை செய்தார். இதுபோன்று வரிசெலுத்தும் முறைக்கு புரோவரி என்று பெயர். இதனை ஏற்றுக் கொண்ட அக்காலத்து விவசாயிகள் கீழக்கல்லூரில் உள்ள சிவபெருமான் முன்னிலையில் மனசாட்சிப்படி புரோவரியாக தங்களிடம் விளைந்த நெல் மணிகளை செலுத்தினர். அன்று முதல் இத்தலத்தில் உறையும் இறைவனுக்கு புரோவரிநாதர் என்ற திருநாமம் உருவானது. இந்தச் செய்திகளைத் தாங்கிய கல்வெட்டுகளை சங்கரன்கோவில், பிரம்மதேசம் போன்ற தலங்களில் காண முடிகிறது. இந்தச் சரித்திரத்தை மெய்ப்பிக்கும் வகையில் கோயிலுக்குள் தர்மதாஸ்தா சந்நதி முன்பு சதுர எடை மேடை இருக்கிறது. இருப்பினும் இங்குள்ள இறைவனின் திருநாமம் தற்போது ‘புறவேலிநாதர்’ என்று மருவி விட்டது.

பாவங்களை நம் மீது அண்ட விடாமல் புறவேலி அமைத்துக் காக்கும் சிவனாக இவர் விளங்குவதால் இந்தப் பெயர் வந்திருக்கலாம் என்கிறார்கள். கோயிலுக்குள்ளே நுழைகிறோம். கோயில் முன்பு காவல்தெய்வமாக தளவாய் மாடன் இருக்கிறார். அவரை வணங்கி மேற்கு நுழைவாயில் மூலமாக கோயிலுக்குள் நுழைகிறோம். நந்தியைக் கடந்து உள்ளே சென்றால் கர்ப்பக் கிரகத்தில் புறவேலி நாதர் அருள்பாலிக்கிறார். எல்லா வளமும் தருகிறோம் என்று அருளாசி வழங்குகிறார். அவர்மீது பசுமாட்டின் கால்தடம் பட்ட வடு காணப்படுகின்றது. மக்களின் வரிப் பணத்தை அந்நாளில் இவருடைய பாதத்தில் வைத்து வணங்கியதால் புரோவரி நாதர் என்கிற பெயரும் உண்டு.

அதனால், வாராக் கடனையும் இத்தல நாதர் வசூலித்துத் தருவார் என்கிற நம்பிக்கையும் உண்டு.
தெற்கு நோக்கிய அம்பாள் சிதம்பரேஸ்வரி எனும் அழகாம்பிகை என்கிற திருநாமத்தோடு அருள் பாலிக்கிறாள். கேட்டதை கொடுக்கும் அன்னையாக நம்மை நோக்கி ஆதரவுக் கரம் நீட்டுகிறார். உடல் நோய், முகச் சுருக்கம் போன்ற நோய்களை இந்த அம்மை நீக்க வல்லவர். இருவரையும் வணங்கி விட்டு கோயிலைச் சுற்றி வருகிறோம். சந்திரன் சூரியன், தட்சிணாமூர்த்தி, கன்னி மூல விநாயகர் என கடந்து செல்கிறோம். தலவிருட்சமாக வில்வ மரம் கோயிலின் பின்புறம உள்ளது. அதன் கீழே வில்வ லிங்கமாக சிவபெருமான் அமர்ந்திருக்கிறார்.


கோயிலைச் சுற்றி வந்தால் சனீஸ்வரன், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோர் காட்சியளிக்கின்றனர். கோயிலின் முன்பு கோடகன் சம்பா அளந்த மேடையும், அதன் முன்பு சாஸ்தாவும் அருள்பாலிக்கிறார். அவரோடு பூதத்தாரும் காணப்படுகிறார். இக்கோயில், நெல்லை சந்திப்புசேரன்மகாதேவி சாலையில் 15 கிலோ மீட்டர் தொலைவில் கீழக்கல்லூர் எனும் பகுதியில் உள்ளது. அடிக்கடி பேருந்து வசதி உண்டு. சேரன்மகாதேவி, பேட்டை பேருந்து மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *