தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள இரு போக நிலங்களின் முதல் போக பாசனத்திற்காக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் தண்ணீர் திறந்து வைத்து, மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரத்தில் அமைந்துள்ள வைகை அணையின் நீர்மட்டம், நிகழாண்டில் கேரளாவில் துவங்கிய தென்மேற்குப் பருவமழையால் கணிசமாக உயர்ந்து 60 அடியை கடந்தது. இதனால் வைகையில் பெரியாறு பிரதான கால்வாயின் கீழ் உள்ள இரு போக பாசன நிலங்களின் முதல் போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்ற தமிழ்நாடு நீர்வளத்துறை இன்று ஜூன் 15 முதல் வரும் அக்டோபர் 12 ஆம் தேதி வரை என 120 நாட்களுக்கு அணையின் நீரிருப்பைப் பொறுத்து நீர் திறக்க உத்தரவிட்டது.
அதன்படி வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் இன்று தண்ணீர் திறந்து வைத்து மலர் தூவி வரவேற்றனர். முன்னதாக பூஜை வழிபாடுகள் செய்யப்பட்டு, அதனைத் தொடர்ந்து அபாய ஒலி எச்சரிக்கை விடப்பட்டு அணையின் பிரதான 7 பெரிய மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று முதல் 45 நாட்களுக்கு 900 கன அடி வீதம் முழுமையாகவும், அதற்கடுத்த 75 நாட்களுக்கு முறை வைத்து திறக்கப்படும் நீரின் மூலம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, மதுரை மாவட்டம் வடக்கு மற்றும் வாடிப்பட்டி ஆகிய தாலுகாக்கள் என பேரணை முதல் கள்ளந்திரி வரையிலான 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர்கள் மதுரை – சங்கீதா, திண்டுக்கல் – சரவணன், தேனி – ரஞ்சித் சிங் மற்றும் தேனி எம்பி தங்கதமிழ்செல்வன், கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் விவசாய சங்கப் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 61.22 அடியாகவும், நீரிருப்பு 3,841 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்வரத்து 1,230 கன அடியாக உள்ள நிலையில் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 969 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.