மஞ்சள் நதி அணை கண்மாயில் கனிம வள கொள்ளையர்களால் ஊராட்சி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகச் செல்லும் அவலம். கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகம்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, எரசைக்கநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மஞ்சள் நதி அணை கண்மாய் அமைந்துள்ளது.
இந்த கண்மாயில் இரவு நேரங்களில் ஜேசிபி, ஹிட்டாச்சி, உள்ளிட்ட கனரக வாகனங்களை கொண்டு டிப்பர் லாரிகளில் தினந்தோறும் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது.
நேற்று நள்ளிரவு கண்மாயில் கனிம வளங்களை கொள்ளையடித்து சென்ற லாரிகளை எரசக்கநாயக்கனூர் கிராம பொதுமக்கள் சிறை பிடித்து வைத்தனர்.
இந்த கண்மாயில் எரசக்கநாயக்கனூர், அப்பிப்பட்டி அழகாபுரி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று கனிவள கொள்ளையர்கள் ஜேசிபி கொண்டு குடிநீர் செல்லக்கூடிய குழாய்களை உடைத்துள்ளனர்.
குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டதால் தண்ணீர் கண்மாய் முழுவதும் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.