• Tue. Apr 23rd, 2024

வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது – தேர்தல் ஆணையர் அதிரடி!

Byவிஷா

Feb 19, 2022

வாக்குப்பதிவு தாமதமான இடங்களில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது என தேர்தல் ஆணையர் அதிரடியாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமான இடங்களில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது என மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 40வது வார்டு செம்பாக்கத்தில் உள்ள அட்வென்ட் பள்ளி வாக்குச்சாவடியில், அறை எண் 240-ல் காலை 11 மணி நிலவரப்படி 216 வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், 1 மணி நேரம் கழித்து சோதித்ததில் 2,177 வாக்குகள் பதிவானதாக வாக்குப்பதிவு இயந்திரத்தில் காட்டியது. அந்த வார்டில் மொத்தமாகவே 1,200 வாக்குகள் மட்டுமே உள்ள நிலையில், 2,177 வாக்குகள் பதிவானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து இயந்திர பழுதை சுட்டிக்காட்டி அதிமுக, திமுக என இரண்டு கட்சி வேட்பாளர்களும் வாக்குச்சாவடி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து இரண்டு மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தேர்தல் அலுவலர் இளங்கோவன் இயந்திர கோளாரே இதற்கு காரணம் என்று தெரிவித்தார். உடனடியாக புதிய இயந்திரம் கொண்டு வரப்பட்டு வேட்பாளர்கள் முன்னிலையில் சரி பார்க்கபட்ட பின் மீண்டும் வாக்கு பதிவு தொடங்கியது. இதனால் வாக்குப்பதிவு மையத்தில் 3 மணி நேரம் வாக்களிக்க இயலாமல் வாக்காளர்கள் அவதிக்குள்ளாகினர்.
அதனைத் தொடர்ந்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணையத்தில் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும் சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமானது எனவும் தெரிவித்தார்.
வேட்பாளர்கள் மரணமடைந்த காரணத்தால் ஆறு இடங்களில் தேர்தல் நடைபெறவில்லை என குறிப்பிட்ட பழனிகுமார், வாக்குச்சாவடிகளில் ஏற்படும் பிரச்னைகளை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமான இடங்களில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *