• Sat. Mar 30th, 2024

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் குட்டையை குழப்பும் கலைப்புலி தாணு முறியடிக்க தயாராகும் விஷால்

Byதன பாலன்

Apr 12, 2023

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு வரும் 30ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது.

இதில் தலைவர், மற்றும் 2 துணை தலைவர், 2 செயலாளர்கள், ஒரு இணை செயலாளர், பொருளாளர், 26 செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டு தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளது.

தலைவர் பதவிக்கு, தற்போதைய தலைவர் முரளி ராமசாமியும், செயலாளர் மன்னனும், போட்டியிடுகின்றனர்.

துணைத் தலைவர் பதவிக்கு, அர்ச்சனா கல்பாத்தி, தமிழ்குமரன், கலைப்புலி சேகரன், ராஜேஷ்வரி வேந்தன், விடியல் ராஜூ போட்டியிடுகின்றனர்.

செயலாளர் பதவிக்கு கமீலா நாசர், எஸ்.கதிரேசன், கே.கதிரேசன், ராதாகிருஷ்ணன், பி.எல்.தேனப்பன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இணை செயலாளர் பதவிக்கு டேவிட் ராஜ், இசக்கிராஜா, ஜெமினி ராகவா, மணிகண்டன், சவுந்தர பாண்டியனும் பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ் ஜெயின், கணேஷ், ரவீந்தர் சந்திரசேகரன், சிங்காரவேலன் ஆகியோ ரும் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் தவிர 26 பேர் கொண்ட பொதுகுழுவிற்கு 77 பேர் போட்டியிடுகிறார்கள்.

முரளி ராமசாமி தலைமையிலானஅணியும், மன்னன் தலைமையிலான அணியினரும் வேட்பாளர் அறிமுக கூட்டங்களை நடத்தி முடித்து வாக்காளர்களை சந்தித்து ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

வேட்புமனுதாக்கல் தொடங்குவதற்கு முன்பாகவும், அதன் பின்னரும் போட்டியின்றி நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை இரு தரப்பிலும் வேட்பாளர்களாக போட்டியிடுபவர்கள் ஏற்க மறுத்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டதாக தெரிகிறது.

இதற்கிடையில் மன்னன் தலைமையிலான தயாரிப்பாளர்கள் உரிமை காக்கும் அணி சார்பில் துணை தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனை லைகா நிறுவனம் விலை பேசி வேட்பு மனுவை வாபஸ் வாங்க செய்ததுடன், முரளி ராமசாமி தலைமையிலான அணியினரை பகிரங்கமாக சந்தித்து ஆதரவு தெரிவித்தார் .

இதன்மூலம் முரளி ராமசாமி அணியில் துணை தலைவர்கள் பதவிக்கு போட்டியிடும் லைகா தமிழ்குமரன், அர்ச்சனா கல்பாத்தி ஆகியோருக்கு கடும் போட்டி தவிர்க்கப்பட்டதுடன் தேர்தலுக்கான மொத்த செலவையும் லைகா, கல்பாத்தி அர்ச்சனா தரப்பில் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளனர்

தேர்தலில் தங்களுக்குவாக்கு கேட்கவோ, பிரச்சாரத்திற்கோ நாங்கள் வர மாட்டோம் எங்களை வெற்றிபெற வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என அணியை வழிநடத்தும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கு அவர்கள் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மைக்கேல் ராயப்பன் வேட்புமனுவை வாபஸ் வாங்க வைத்ததன் மூலம் மன்னன் தலைமையிலான அணி ஆட்டம் கண்டுவிடும் என எதிர்பார்த்த எதிர் அணிநோக்கம் தவிடுபொடியானது மேலும் வீரியத்துடன் தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது.

சென்னையில் நடைபெற்ற மன்னன் அணியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசிய தயாரிப்பாளரும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கார்ப்பரேட் நிறுவனத்தின் கை கூலிகளாக எதிரணியினர் மாறிவிட்டனர், வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கும், வாக்கு சேகரிக்கவும் தயாரிப்பாளர்களை நேரில் சென்று சந்திக்காதவர்கள் வெற்றிபெற்று பொறுப்புக்கு வந்தால் தயாரிப்பாளர்களின் பிரச்சினையை எப்படி பொறுமையாக கேட்டு நடவடிக்கை எடுப்பார்கள்.

என்னை அவர்கள் ஆதரிக்க சொல்லி பல நாட்களாக பேசி பார்த்தார்கள். நான் ஒப்புக்கொள்ளவில்லை. எதிர்நீச்சல் போட்டு போராட்டத்தை நடத்தும் நான் கார்ப்பரேட்டுகளையும், நேரடியாகபடமே எடுக்காமல் குறுக்குவழியில் தொடர்ந்து
பண பலத்தின் மூலம் வெற்றிபெற்று வருபவர்களை ஆதரிக்க மாட்டேன். கார்ப்பரேட்டுகளுக்கும் – தயாரிப்பாளர்களுக்குமான போராட்டம்தான் இந்த தேர்தல். அதனால் மன்னன் தலைமையிலான அணி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றிபெற வேண்டியது காலத்தின் கட்டாயம். அதற்காக இறுதிவரை போராடுவேன் என உணர்ச்சி பிழம்பாக பேசினார்.

இதனால் மன்னன் தலைமையிலான அணியினர்
மேலும் உற்சாகத்துடன் தீவிரமாக தேர்தல் வேலைகளை செய்து வருகின்றனர். இதுவரையிலும் முரளி ராமசாமி, லைகா தமிழ்குமரன், அர்ச்சனா கல்பாத்தி ஆகிய மூவரும் வாக்கு கேட்டு எந்த தயாரிப்பாளரையும் களத்தில் இறங்கி நேரடியாக சந்திக்கவில்லை.

செயலாளருக்கு போட்டியிடும் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு மட்டுமே தயாரிப்பாளர்களை சந்தித்து வாக்கு கேட்டுவருகின்றனர். இதற்கு நேர்மாறாக எதிர் அணியினர் மன்னன் தலைமையில் தீவிரமாக தயாரிப்பாளர்களை சந்தித்து வாக்கு கேட்டு வருகின்றனர்.

இது தயாரிப்பாளர்கள் மத்தியில் முரளி ராமசாமி தலைமையிலான அணி மீது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி மன்னனுக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது.

கலைப்புலி தாணு ஒரு தீய சக்தி அவர் அப்புறப்படுத்த வேண்டியவர் என கூறி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட கலைப்புலி தாணு ஆதரித்த ராதாகிருஷ்ணன் தலைமையில் போட்டியிட்ட அனைவரையும் தோல்வியடைய செய்து தன் தலைமையில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் வெற்றிபெற செய்தார்.

நடைபெற உள்ள தேர்தலில் முரளி ராமசாமி மற்றும் அவர் தலைமையிலான அணியை உருவாக்கியதில் கலைப்புலி தாணுபெரும் பங்குவகித்தார்.

அதற்கு காரணம் சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.
சுழற்சி முறையில் இந்த முறை தமிழ் திரைப்பட துறையை சேர்ந்தவர்கள் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

முரளி ராமசாமி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக வெற்றிபெற்றுவிட்டால் பணவசதியுள்ள வர்த்தக சபை தலைவராக தான் ஆகி விடலாம் என கலைப்புலி எஸ்.தாணு கணக்கு போட்டார் என்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் மன்னன் அணிக்கு ஆதரவு பெருகிவருவதால் முரளி ராமசாமி அணி வெற்றிபெறுவது கடினமாகிவிடும் என்பதால் குட்டையை குழப்பும் வேலையை கலைப்புலி தாணு மேற்கொண்டுவருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே முரளி ராமசாமி அணியில் செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் தயாரிப்பாளரும், ருத்ரன் பட இயக்குநருமான பைவ்ஸ்டார் கதிரேசன் தனி ரூட்டில் தேர்தல் வேலைகளை செய்து வருகிறார் என கூறப்படுகிறது.

மன்னன் அணியில் உள்ள கமீலா நாசருக்கும், தனக்கும் வாக்கு கேட்டுவருகிறாராம். இதன்மூலம் தற்போதைய செயலாளர் ராதாகிருஷ்ணனை ஓரங்கட்டி உட்காரவைத்துவிடலாம் என கூறப்படுகிறது.

இதுபோன்ற உள்குத்து வேலைகளுக்கான பேச்சுவார்த்தைகள் துணை தலைவர் பொறுப்புக்கு சுயேச்சையாக போட்டியிடுபவர்களிடம் மன்னன் அணி தரப்பில் உங்களுக்கு ஒன்று எங்களுக்கு ஒன்று என்கிற பாணி மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். ஏற்கனவே இவர்கள் அணியில் துணை தலைவர் வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் வாபஸ் வாங்கிவிட்டதால் அவருக்கான வாக்கை சுயேச்சை வேட்பாளருக்கு போடுவது.

அதற்கு பிரதியுபகாரமாக மன்னன் அணி வேட்பாளருக்கு அவரது ஆதரவாளர்கள் வாக்களிக்கவும் கிட்டதட்ட பேசிமுடிக்கப்பட்டுவிட்டதாம்.
இந்த தகவல் கசிந்த பின் தலைசுற்றி போன கலைப்புலி எஸ்.தாணு தேர்தலை தவிர்த்து இரண்டு அணியும் துணை தலைவர் பதவியை தவிர்த்து மற்ற பதவிகளை பங்குபோட்டுகொள்ளலாம். தலைவர் யார் என்பதை குலுக்கல் முறையில் எடுக்கலாம் என மன்னன் அணியில் முக்கிய பொறுப்புக்கு போட்டியிடும் வேட்பாளரிடம் பேச்சு வர்த்தையை தொடங்கியுள்ளார்.

இந்த தகவலை அவரே தயாரிப்பாளர்கள் மத்தியில் கசியவிட்டுள்ளார். ஆனால் இதனை மன்னன் தரப்பினர் ஏற்க்கவில்லையாம். எதுவாக இருந்தாலும் தேர்தலை சந்திப்போம் என்பதே அவர்கள் முடிவாக உள்ளது என கூறுகின்றனர்.

இதற்கிடையில் மன்னன் அணிக்கு ஆதரவாக விஷால் வாக்கு கேட்டுவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய வர்த்தக சபை தலைவர் பதவிக்கு கலைப்புலி எஸ்.தாணு குறிவைத்து காய் நகர்த்தும் இந்த முயற்சியை முறியடிப்பதுடன் தேவைப்பட்டால் கலைப்புலி எஸ்.தாணுவை எதிர்த்து நடிகர் விஷால் போட்டியிடவும் வாய்ப்புள்ளதாக அவரது நட்பு வட்டாரம் நமட்டு சிரிப்புடன் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *